மாண்டியாவில் உள்ள பியூசி கல்லூரியில் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக நேற்று இந்து அமைப்பு மாணவர்கள் காவிக்கொண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து இருசக்கர வாகனத்தில் கல்வி வளாகத்திற்குள் நுழைந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம்  ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். 

ஹிஜாப் பிரச்சனை இனியும் தொடர்ந்தால் நாங்கள் அனைவரும் முஸ்லிம் சகோதரிகளுக்கு ஆதரவாக ஹிஜாப் அணிவோம் என பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு பலரும் ஆதரவு எதிர்ப்புக்குரல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்தது முதல் அரசுக்கு எதிராக எழும் ஆதரவு- எதிர்ப்புக் குரல்கள் வலுவாகவே இருந்து வருகிறது. குறிப்பாக பாஜகவால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும் குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வரகிறது. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்மைத்துவ நெறிமுறைகளுக்கு மரியாதை உட்பட ஜனநாயக உணர்வு இந்தியர்களிடம் வேரூன்றி உள்ளது என அமெரிக்கா நடத்திய ஜனநாயக உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமரின் பேச்சு மற்றும் அவரது நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமை, ஜனநாயகர் என்று இருந்தாலும் மறுபுறம் இந்துத்துவ தலைவர்கள் இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்புப் பிரச்சாரம் செய்வது, இஸ்லாமியர்களை கொள்ள இந்துக்களே திரண்டு வாருங்கள் என வெறுப்பை உமிழ்வது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுதான் சகிப்புத்தன்மையா? இதுதான் பன்முகத்தன்மையா என பலரும் பாஜகவை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சகிப்புத்தன்மை என பேசும் மோடி இந்துத்துவா தலைவர்களின் வெறுப்பு பேச்சை தடுக்க தவறியது ஏன் என்ற விமர்சனமும் எழுதுகிறது. இறைச்சிக்காக பசுக்களை கடத்தியதாக இஸ்லாமிய மற்றும் தலித்துகள் மீது தாக்குதல், இஸ்லாமியர்கள் லவ் ஜிகாத்தில் ஈடுபடுவதாகக் கூறி அவர்கள் மீது இந்து வலதுசாரி குழுக்கள் தாக்குதல், இந்தியாவில் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்படுவது, சிஏஏ , இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா என இஸ்லாமியர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கு எழுந்தன. இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது ஜாப் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா பியூசி கல்லூரியில் இந்து மாணவர்கள் சிலர் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மாணவிகளுக்கு எதிராக அவர்கள் காவி துண்டு அணிந்துகொண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என தெரிவிக்கும் அவர்கள் எவரும் மத அடையாளங்களோடு வகுப்பறைக்கு வரக்கூடாது, அவர்கள் வந்தால் நாங்களும் வருவோம் என இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் இந்த போராட்டம் வன்முறையாக மாறும் நிலை எட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் இந்த போராட்டம் பரவியுள்ளது, உடுப்பி, சிக்மங்களூர், மங்களூர், சிவமொக்கா போன்ற பல பகுதிகளில் பள்ளி கல்லூரிகளில் இந்தப் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கும் பள்ளி நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன. பல கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாண்டியாவில் உள்ள பியூசி கல்லூரியில் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக நேற்று இந்து அமைப்பு மாணவர்கள் காவிக்கொண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து இருசக்கர வாகனத்தில் கல்வி வளாகத்திற்குள் நுழைந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். அப்போது அந்த இடத்தில் பதட்டம் அதிகரித்தது. ஆனால் அந்த கும்பலை எந்த அச்சமும் இன்றி எதிர்கொண்ட அந்த மாணவி அல்லாஹு அக்பர் என பதிலுக்கு முழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்து ஏபிவிபி மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களையும் அச்சுறுத்தும் வகையில் இடையூறு செய்தனர். தற்போது இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த சம்பவத்தை கண்டித்து வருகின்றனர். சுயநலத்திற்காக மாணவர்களிடம் அரசியலை புகுத்துவது நியாயமில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். மாணவர் போட்டர் வன்முறையை எட்டியுள்ள நிலையில் 3 தினங்ளுக்கு பள்ளி , கல்லூரிகளுக்கு கர்நாடக மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 

இந்நிலையில்தான் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் லட்சுமிராமகிருஷ்ணன் இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ஹிஜாப் பிரச்சினை இனியும் தொடர்ந்தால் நாங்கள் அனைவரும் முஸ்லிம் சகோதரிகளுக்கு குரல் கொடுக்க ஹிஜாப் அணிவோம், 22 ஆண்டுகளாக முஸ்லிம் நாட்டில் வாழ்ந்து இருக்கிறோம், ஹிஜாப் அணிபவர்களிடம் அதை அகற்றச் சொல்வது வலி மிகுந்தது. ஹிஜாப் அணிவது ஒரு பாதுகாப்பான உணர்வு, எனக்கே அதை அணிய பலமுறை தோன்றியுள்ளது. ஹிஜாபை அணிய கூடாது என்று சொல்ல என்ன உரிமை உள்ளது. மாணவர்களை இதற்காக தூண்டி விடுவதை கடுமையாக கண்டிக்கிறேன் என அவர் எச்சரித்துள்ளார். அவரின் இந்த கருத்தை பலரும் ஆதரிக்கும் அதே நேரத்தில் சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.