நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜவினர் கூட்டணி உள்ளிட்ட செயல்பாடுகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில்  தற்போதைய பாஜக  அரசின் செயல்பாடு மற்றும் பிரதமர் மோடியின் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது.

‘டெய்லிஹண்ட் என்ற  செய்தி நிறுவனம் மற்றும் நீல்சன் இந்தியா நிறுவனம் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.இதில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதற்கு 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர் 2-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித்தருவார் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளில் மோடியின் தலைமைத்துவ திறன் பற்றிய விவகாரத்தை பொறுத்தவரை, அவர் மீது 2014-ம் ஆண்டு வைத்திருந்ததை போல அல்லது அதற்கு மேலான நம்பிக்கை வைத்திருப்பதாக 63 சதவீதத்தினர் பதிலளித்து இருக்கின்றனர்.

தேசிய நெருக்கடி காலங்களில் நாட்டுக்கு தலைமை தாங்குவதற்கு சரியான நபராக பிரதமர் மோடியை 62 சதவீதத்தினர் ஆதரித்து உள்ளனர். இதில் அடுத்த இடங்களை ராகுல் காந்தி 17 சதவீதமும்,  அரவிந்த் கெஜ்ரிவால் 8 சதவீதமும்,  அகிலேஷ் யாதவ் 3 சதவீதமும் பெற்றுள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகளில் குறிப்பாக நீண்டகால ஊழல் பிரச்சினையை வேரறுக்கும் விவகாரத்தில் 60 சதவீதம் பேர் மோடிமீது நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிக ஆதரவு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.