கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேரடியாக உரையாடும் விதமாக மன் கி பாத் என்ற 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணி அளவில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் என்கிற 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. கடந்த ரமலானின் போது, இந்த ஆண்டு இவ்வளவு பெரிய நெருக்கடியை நாம் சந்திக்க நேரிடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்போது உலகம் முழுவதும் இந்த சிக்கலை எதிர்கொள்ளும் போது, இந்த ரமலானை பொறுமை, நல்லிணக்கம், உணர்திறன் மற்றும் சேவையின் அடையாளமாக மாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்மாதம் முடிவதற்குள்ளாகவே வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வர ரமலான் நேரத்தில் கூடுதலாக பிரார்த்தனை செய்வோம். 

அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயமாக கொரோனாவில் இருந்து நாம் மீளலாம். கொரோனா வைரஸ் காரணமாக முகக் கவசம் அணிவது நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. முகக் கவசங்கள் அணிந்தவர்கள் அனைவரும் நோயாளிகள் என்று அர்த்தமல்ல. அவற்றை அணிவது ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளமாக மாறும். பிறரை நோயிலிருந்து நாம் பாதுகாப்பாக பாதுகாக்க விரும்பினால் முகக் கவசங்களை பயன்படுத்துவது மிக முக்கியம். தற்போது பொது இடங்களில் எச்சில் துப்புவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது. அது போன்ற பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கத்தை மக்கள் அனைவரும் கைவிட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.