நீதிமன்றங்கள் திறப்பு குறித்து மிக விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களை முழுமையாக திறக்ககோரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தலைமை நீதிபதியை சந்தித்ததனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், கொரோனா தாக்கம் காரணமாக அவசர  வழக்குகளின் விசாரணை மட்டும் கணொலி மூலமாக நடைபெற்று வருவதால் அனைத்து வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் எனவும், இதனால் பெரும்பாலான வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், பள்ளிகள், திரையரங்கங்கள், திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள சூழலில் நீதிமன்றங்களையும் திறக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார். தலைமை நீதிபதி நிர்வாக குழுவை உடனடியாக கூட்டுவதாக தெரிவித்துள்ளார், எனவே நாளைய தினம் முறையான கோரிக்கை மனுவை அளிக்க உள்ளதாக தெரிவித்தார். 

மிக விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.கொரோனா தொற்று ஏற்பட்டு முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதி மன்றங்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இயங்காத நிலை உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களை நம்பியுள்ள குடும்ங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.