We have accused the Election Officer of violating the Vishal

நாங்கள் மிரட்டியதால் தான் வேட்புமனுவை ஏற்றுகொள்வதாக அறிவித்தோம் என தேர்தல் அலுவலர் தரப்பு தங்கள் மீது குற்றம் சாட்டுவதாகவும், மாயமானவர்களை திரும்பி அழைத்துவர நாங்கள் கூறவில்லை என தேர்தல் அலுவலர் கூறினார் எனவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட நடிகர் விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துக்கள் உள்ளதாகவும், சொத்து கணக்கு விவரங்கள் முறையாக குறிப்பிட்டதாலும் அவருடைய மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்துதண்டையார் பேட்டை சென்ற விஷால் தமது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது முறையாக தேர்தல் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்திய விஷால் தகுந்த வீடியோ ஆதாரமும், ஆடியோ ஆதாரமும் இருப்பதாக தெரிவித்தார். 

இந்நிலையில், மிரட்டப்பட்டதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோவை நடிகர் விஷால் வெளியிட்டார். இதையடுத்து ஆதாரத்தின் அடிப்படையில் விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. 

ஆனால் சில மணிநேரங்களில் மீண்டும் வேட்புமனுவை நிராகரித்து அதிகாரப்பூர்வமாக தேர்தல் அலுவலர் வேலுசாமி தெரிவித்தார். 

இதையடுத்து ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நடிகர் விஷால் மனு அளித்து முறையீடு செய்துள்ளார்.

இதனிடையே விஷாலை முன்மொழிந்த சுமதி, தீபன் இருவரும் மாயமாகியுள்ளனர். இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியை நடிகர் விஷால் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், நாங்கள் மிரட்டியதால் தான் வேட்புமனுவை ஏற்றுகொள்வதாக அறிவித்தோம் என தேர்தல் அலுவலர் தரப்பு தங்கள் மீது குற்றம் சாட்டுவதாகவும், மாயமானவர்களை திரும்பி அழைத்துவர நாங்கள் கூறவில்லை என தேர்தல் அலுவலர் கூறினார் எனவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை எனவும் மக்களிடம் தெரிவித்து விட்டேன், இந்திய தேர்தல் ஆணையத்திலும் முறையிடுவேன் எனவும் குறிப்பிட்டார்.