அ.தி.மு.க., கூட்டணியில், அ.ம.மு.க.,வை சேர்த்து விட, பா.ஜ.க இன்னும் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அது கை நழுவினால், மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் சேரலாம் என்பது டி.டி.வி.தினகரனின் எண்ணம். ஆட்சி அமைக்காவிட்டாலும் கணிசமான ஓட்டு கிடைக்கும். சட்டசபைக்கு போகலாம் என நம்புகிறார். அதே சமயம் அ.ம.மு.க., தனித்து போட்டியிடுவதை, சசிகலா விரும்பவே இல்லை. 'மக்கள் ஆதரவு இல்லை என்று தெரிந்தால், நம்மை யாரும் சீண்ட மாட்டார்கள். அதைவிட சும்மா இருந்து விடலாம்' என்று, தினகரனிடம் கூறியுள்ளார்.

'வெற்றி கிடைக்காது என தெரிந்தும், 234 தொகுதிகளிலும் ஆட்களை நிறுத்தி, பெரும் செலவு செய்ய வைத்து, விசுவாசிகளை கடனாளி ஆக்குவது நல்லதல்ல. 'அ.தி.மு.க.,வில் உள்ள முக்குலத்தோர் ஓட்டுகள் நம்மால் சிதறினால், அது, நம் சமுதாயத்தினரின் தோல்விக்கு காரணமாகி விடும். அந்தப் பழியில் இருந்து மீள முடியாது' என எச்சரித்துள்ளார். ஆனால், டி.டி.வி.தினகரன், எண்ணம் வேறு மாதிரி இருக்கிறது. 'அ.தி.மு.க., வெற்றியை தடுத்தாலே, நம் செல்வாக்கு எகிறி விடும். அதன் மூலம் கட்சி நம் கைக்கு வந்து விடும்' என, கணக்கு போடுகிறார்.