கட்சி துவங்கியாச்சு, இனி களேபரம் இல்லாவிட்டால் எப்படி?...இதோ வெடிக்க துவங்கிவிட்டது ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் கலக குரல்கள். 
முதலாவதாக பட்டாசுக்கு திரி கிள்ளியிருப்பவர்  ஈரோட்டை சேர்ந்த மகாதேவன்.

இவர் 1981 முதல் 2002 வரை கமல் நற்பணி இயக்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவராக இருந்தாராம். அவரது குழந்தைகளுக்கு பெயர் வைத்ததே கமல்தானாம். ஆனால் இடையில் மகாதேவனுக்கும், மற்றொரு நிர்வாகிக்கும் இடையே நடந்த கருத்து மோதலால் மகாதேவனை ‘நீங்க என் பெயர்ல எந்த நற்பணியும் இனி செய்ய வேண்டாம்.’ என்று சொல்லி மன்றத்திலிருந்தும் நீக்கிவிட்டார் கமல். 

இதன் பிறகு ‘இதயம் நற்பணி இயக்கம்!’ எனும் அமைப்பை துவக்கிய மகாதேவன் அப்துல்கலாமே அழைத்து பாராட்டுமளவுக்கு ஏழைகளுக்கு உயிர்காக்கும் ஆபரேஷன்களை செய்து வருகிறார். கலாமிடமே ‘இந்த விருதும், பெருமையும் எனக்கானதல்ல. என் தலைவர் கமலுக்கானது. அவர்தான் சேவை செய்ய தூண்டினார்.’ என்று சொல்லியிருக்கிறார். 

இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக கமலை சந்திக்க முயன்று முயன்று தோற்றிருக்கிறார் மகாதேவன். இப்போது கமல் கட்சி துவங்கிவிட, அதில் இணைந்து செயல்பட துடிக்கிறாராம். ஆனால் கமலை அவர் சந்திக்க விடாதபடி தற்போது கமல்ஹாசன் கட்சி மற்றும் நற்பணி மன்றத்தின் அகில இந்திய பொறுப்பாளராக இருக்கும் தங்கவேல் தடுக்கிறாராம்.

கமலிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டு தங்கவேலை பல முறை தொடர்பு கொண்டுவிட்டாராம் மகாதேவன். ஆனால் எந்த பதிலுமில்லையாம். 
“கமல் என்னை நீக்கி வைத்த பிறகும் அவர் சொல்லிக் கொடுத்த சேவைகளை செய்து, அப்துல்கலாமிடமே பாராட்டு வாங்கினேன். அந்த அப்துல்கலாமின் நினைவிடத்தில் இருந்துதானே கட்சியை துவக்கியிருக்கிறார் தலைவர்! 

என்னை பார்க்க விருப்பமில்லை என்று தலைவர் சொல்லிவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் நேற்று இந்த இயக்கத்துக்கு வந்த தங்கவேலு எங்களை போன்ற நெடுங்கால ரசிகர்களை இப்படி தலைவரின் நிழலை கூட நெருங்கவிடாமல் தள்ளி வைப்பது எந்த விதத்தில் நியாயம்?

ஆனால் இதையெல்லாம் நம்மவரிடம் சொல்வது யார்?” என்று கேட்கிறார். 

ஆனால் தங்கவேல் தரப்போ ‘குற்றச்சாட்டின் பேரில் எப்போவோ மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர், தற்போது மன்றத்திலோ அல்லது கட்சியிலோ இல்லாத ஒருவர் இப்படியெல்லாம் பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? முதலில் அவருக்கும் மன்றத்துக்கும், தலைவருக்கும் என்ன தொடர்பிருக்கிறது?’ என்கிறது.