கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் மற்றும் உயரதிகாரிகள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, அபராதத்தை உயர்த்தி நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கபோவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். நாளை முதல் மண்டலம் வாரியாக குழு அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் படாதபாடு படுத்தி வருகிறது. இதுவரை இலட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து அது மக்களுக்கு செலுத்தப்பட்டு வரினும், அதன் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கூட கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆபத்து கட்டத்திற்கு செல்வது தடுக்கப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் கொரோனா அடிக்கடி உருமாறிய தன்னை தகவமைத்துக் கொள்கிறது. டெல்டா வகையாக உருமாறிய கொரோனாஒமைக்ரானாக உருவெடுத்துள்ளது. டெல்டா வகையை காட்டிலும் மூன்று மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என உலக சுகாதார நிறுவனம் சர்வதேச நாடுகளை எச்சரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 23 மாநிலங்களில் இந்த ஓமைக்ரான் பரவியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் வர்த்தக தலைநகரான மகாராஷ்டிராவில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. குஜராத், ராஜஸ்தான், தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிளும் இது வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டிப்பிடிக்கும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் தினசரி கொரோனா தோற்று நேற்று ஒரே நாளில் மட்டும் 51 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இயன்ற அளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று இன்னும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது இதை உணர்ந்துகொண்ட மூன்றாவது அலையை உருவாவதை தடுக்க வடமாநிலங்களில் மேற்கொள்ளப்படும் இரவு நேர ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை போன்ற நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முதல் மண்டலம் வாரியாக குழு அமைத்து கண்காணிக்க தீவிரப்படுத்தப்போவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் மற்றும் உயரதிகாரிகள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, நாளை காலை முதல் காவல்துறையுடன் மாநகராட்சி ஊழியர்கள் மூன்று வேளையும் அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். அதேபோல் சென்னையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முன் அனுமதி வாங்க வேண்டும் என அவர் அறிவித்தார். சென்னையில் தற்போது வரை 5 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளதாகவும், 8 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

நோய் தொற்று வேகமாக அதிகரித்து வரும் காரணத்தினால் இவர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்றார். பொதுமக்கள் நலன் கருதி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்த அவர். இனி அபராதம் அதிகமாக வசூலிக்கப்படும் என எச்சரித்தார். புத்தாண்டு என்பதால் நாளை கோவிலுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அவர்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
