எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர் என்றும், அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை முதல் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர். அதனால்தான் தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும், அதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்றார். 

எகிப்து வெங்காயம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் எகிப்து வெங்காயத்தை நானும் சாப்பிட்டேன். அதில், எந்த பாதிப்பும் இல்லை. அனைவரும் தைரியமாக சாப்பிடலாம் என கூறினார். வெங்காயம் விலையை கட்டுப்படுத்த இறக்குமதி செய்யப்பட்ட 1000 மெட்ரிக் டன் எகிப்து வெங்காயத்தை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.