துரோகத்தால் வீழ்த்தப்பட்டதா வீரபாண்டியாரின் குடும்பம்..? பரபரக்கும் சேலம்..!
கே.என்.நேருவை வைத்து தன்னை அவமானப்படுத்தி விட்டார் சுரேஷ்குமார் என்ற மனவேதனையுடன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வீரபாண்டி ராஜா இறந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி பல ஆண்டுகளாக கட்டிக் காத்துவந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ஆ.ராஜா ஓரிரு நாட்களுக்கு முன் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார்.
இந்நிலையில், அவரது இறப்பு குறித்து சேலத்தில் துண்டு பிரசுரம் ஒன்று வெளியாகி பரபரப்படை கிளப்பி உள்ளது. அதில், ‘’பாரப்பட்டி சுரேஷ்குமார் செய்த அராஜகம், 6 கொலைகள், கொள்ளை, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து போன்ற வழக்குகளில் தொடர்பில்லாத வீரபாண்டியாரை சிக்க வைத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் காரணமாகவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அதாவது, சுரேஷ்குமாரால் வீரபாண்டி ஆறுமுகம் கொல்லப்பட்டார். பாரப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மறைந்த குமாரின் குடும்பத்திற்கு தான் சீட் கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம் என வீரபாண்டி ராஜா உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்தபோதும் கே.என்.நேரு மூலமாக பாரப்பட்டி சுரேஷ்குமார் தான் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் என்று அறிவிக்க வைத்தார் இந்த பாரப்பட்டி சுரேஷ்குமார். அதனால் கே.என்.நேருவை வைத்து தன்னை அவமானப்படுத்தி விட்டார் சுரேஷ்குமார் என்ற மனவேதனையுடன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வீரபாண்டி ராஜா இறந்துள்ளார். அதை தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறி இருக்கிறார் வீரபாண்டி ராஜா.
அவரின் மறைவுக்கு இப்படிப்பட்ட மன உளைச்சலை காரணமாகும். மொத்தத்தில் வீரபாண்டியர் குடும்பத்தை அழிக்க வேண்டுமென்று பாரப்பட்டி கந்தசாமி சொன்னதை அவரது மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் செய்துவிட்டார். கூடவே இருந்து குழி பறித்து விட்டார் பாரப்பட்டி சுரேஷ். துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வீரபாண்டியாரின் குடும்பம்’’ என அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.