அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்கள்  வாகனங்கள் ஓட்டி செல்வதை பெற்றோர்கள் ஊக்குவிக்க கூடாது என்ற அவர், பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டி சென்றால் அவர்களின் பள்ளியை கண்டறிந்து ஆசிரியர்கள் மூலம் சம்மந்தப்பட்ட மாணவரை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் என்றார். 

அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவோரை கண்டறிய 367 சந்திப்புகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோடைகாலத்தில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் வழங்கும் திட்டம் தமிழக காவல் துறையால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி வேப்பேரி ஈ.வே.ரா சம்பத் சாலை சந்திப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கினார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இன்று முதல் அடுத்த 4 மாதங்களுக்கு காலை மாலை என இரு வேளையும் போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் வழங்க உள்ளதாகவும், தினசரி காலை 2500 பாக்கெட்டுகளும், மாலை 2500 பாக்கெட்டுகளும் என மொத்தம் 5000 வீதம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இதற்காக வருடந்தோறும் 30 லட்சம் ரூபாய் அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்த அவர், இதுமட்டுமல்லாமல் கோடை காலத்தில் போக்குவரத்து காவல் துறையினருக்கு உடல் ரீதியான பிரச்சனை ஏற்படாமல் தடுக்க மருத்துவ முகாம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் தொடர்பான செயல்பாடுகளை இனி அந்தந்த காவல் மாவட்டத்தின் போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளரே எடுக்கும் முறையை கொண்டு வரப்போவதாகவும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குடிசைமாற்று வாரிய குடியிருப்பு மோசடி புகார் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும், அந்த மனு மீதான விசாரணை நடந்து வருவதாகவும், நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், அதிகவேகமாக வாகனத்தை இயக்குபவர்களை கண்டறிய 367 சந்திப்புகளின் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக் ஷாப்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் காவக் ஆணையர் தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டி செல்வதை பெற்றோர்கள் ஊக்குவிக்க கூடாது என்ற அவர், பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டி சென்றால் அவர்களின் பள்ளியை கண்டறிந்து ஆசிரியர்கள் மூலம் சம்மந்தப்பட்ட மாணவரை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் என்றார். மேலும், கொரோனா காலத்தின் போது பிரீத் அனலைசர் கருவி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தற்போது பிரீத் அனலைசர் கருவி மூலமாக குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது தினசரி 150 வழக்குகள் வரை போடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், லோன்-ஆப் மோசடியை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், இணை ஆணையர் தலைமையில் 4 சைபர் காவல் நிலையங்கள் விரைவில் வர இருப்பதாகவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.