வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார். 
சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்த பின் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் அடிக்கடி சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பதும், கண்டைனர்கள் அடிக்கடி வந்துசெல்வதும் என பல்வேறு விதமான செயல்கள் சந்தேகங்களை எழுப்புகிறது.
 
எனவே விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் நம்பிக்கையை உருவாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை .ஏற்கனவே 30% வாக்காளர்கள் வாக்களிக்க வருவதில்லை, வாக்களிப்பதிலும், வாக்கு எண்ணிக்கையும் இதுபோன்ற மர்மங்களால் பொதுமக்களுக்கு நம்பிக்கை குறையும்.

வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை புகார்களாக அளித்துள்ளோம். இது முதற்கட்டம் தான், இன்னும் பல புகார்களை திரட்டி மனுவாக அளிக்கவுள்ளோம்.  இது ஜனநாயகத்தை காப்பாற்றும் முயற்சி, எங்களை மட்டுமே காப்பாற்றிக்கொள்ளும் முயற்சி அல்ல. பல சந்தேகங்கள், மர்மமான விஷயங்கள் நிகழ்கிறது. கட்டட பணிகள் நடைப்பெறுவது சந்தேகத்திற்கு விளக்காக அமைகிறது.

 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலர் கையில் நடமாடுகிறது. இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது அனைவரும் அறிந்தது தான். இது முதல் முறை அல்ல பல தேர்தலில் நடைப்பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் பாதுகாப்பில் சரியாக செயல்படவில்லை. அதை எப்படி மேம்படுத்தலாம் என்ற பரிந்துரையை அளித்துள்ளோம்’’என அவர் தெரிவித்தார்.