தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி 38 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகள் ஆகியவற்றுக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்த பின்னர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 43 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் இந்த மையங்களிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
இவ்வாறு மாநிலம் முழுவதும் உள்ள 43 வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கு நடைபெறும் 23-ஆம் தேதியன்று மேலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு, கூடுதலாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

 வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயில் தொடங்கி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்குகளை எண்ணும் மேஜை வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு மேஜைக்கும் தனித்தனியாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 ஒவ்வொரு மையத்திலும் 30 கண்காணிப்பு கேமராக்களில் இருந்து 40 கண்காணிப்பு கேமரா வரை பொருத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதற்கான கட்டுப்பாட்டு அறையும், அங்குள்ள காவல்துறை தற்காலிக கட்டுப்பாட்டு அறையோடு இணைந்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

1.12 லட்சம் போலீஸார்:  வாக்கு எண்ணிக்கையின்போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது. முக்கியமாக அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

மேலும், மாநிலம் முழுவதும் போலீஸாரின் கண்காணிப்பையும், ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், வழிப்பாட்டு தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப் பணியில் 1.12 லட்சம் போலீஸார் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தேர்தல் பிரிவு டிஜிபி அசுதோஷ் சுக்லா தலைமையில் செய்யப்பட்டுள்ளன.
சென்னை: சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வட சென்னை மக்களவை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரி மையத்திலும், மத்திய சென்னை தொகுதி வாக்குகள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மையத்திலும், தென் சென்னை தொகுதி வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழக மையத்திலும் எண்ணப்படுகின்றன. 

இந்த இடங்களில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று  பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படுகிறது.  சென்னை முழுவதும் அன்றைய தினம் சுமார் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

 இதற்கிடையே, 23-ஆம் தேதி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் விசுவநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.