கடந்த ஒரு மாத காலமாக மகாராஷ்டிரா அரசியல் பரபரப்பாகவே இருந்தது. அங்கு யார் ஆட்சி அமையும் என்று யாரும் கணித்து சொல்ல முடியாத அளவுக்கு தினந்தோறும் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. 

இறுதியாக சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அஹாதி கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியானது. அந்த கூட்டணியின் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதனையடுத்து அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த வியாழக்கிழமையன்று உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும், விரைவில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்கும்படி உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் உத்தரவிட்டார். இதனையடுத்து உத்தவ் தாக்கரே தன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்த உள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று  மதியம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. புதிய தற்காலிக சபாநாயகர் திலிப் வால்சே பாட்டீல் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உள்ளார். 

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில்  இன்று உத்தவ் தாக்கரே அரசு மீதான வாக்கெடுப்பு நடப்பதுடன், புதிய சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தாக்கலும் நடைபெற உள்ளது. நாளை சட்டப்பேரவையில் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. புதிய சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.