மத்திய பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படு தோல்வி அடைந்தது. நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 126 எம்.பி.க்களும், எதிராக 325 எம்.பி.ககளும் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

ஆந்திர மாநிலத்துக்கு தனி அந்தஸ்து வழங்குவதாக உறுதி அளித்துவிட்டு மோடி அரசு அதை நிறைவேற்றவில்லை எனக் கூறி தேசிய கூட்டணியில் இருந்த தெலுங்கு தேச கட்சி  வெளியேறியது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவாதத்தில் பங்கேற்று தீப்பொறி வறக்க பேசினார். அவரது பேச்சை காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல் பிரதமர் மோடியும் பாராட்டினார்.

இந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி  பதில் அளித்து பேசினார்.. இன்று காலை  தொடங்கிய  நாடாளுமன்ற  கூட்டத்தொடர் 12 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பின்னர் 11 மணிக்கு மின்னணு முறையில் ஓட்டெடுப்பு  தொடங்கியது.  முன்னதாக நடந்த குரல் ஓட்டெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. பின்னர் மின்னணு முறையில் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் தீர்மானத்திற்கு எதிராக 325 பேர் ஓட்டளித்தனர். ஆதரவாக 126 எம்.பி.க்கள் ஓட்டளித்தனர்.  இதையடுத்து தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.