தாமரைக்கு வாக்களிக்காதீர்கள், நோட்டாவுக்கு வாக்களிப்பீர்' என்று மைசூரு மற்றும் சாமராஜ்நகர் மாவட்டங்களில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி தலைமைக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கர்நாடகாவில் வரும் 12 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் –பாஜகவிடையே கடும் போட்டி நடைபெற்று வரும் நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இத்தேர்தலில் அவர்களுக்கு இணையாக தங்களது பலத்தை காட்டி வருகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளில் தேர்தலில் நிற்க சீட் கிடைக்காதவர்கள் உள்ளடி வேலைகளைத் தொடங்கிவிட்டனர்.

வாக்களிக்காதீர்கள், நோட்டாவுக்கு வாக்களிப்பீர்' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களை சமூக ஆர்வலர்கள் அடித்து ஒட்டிவிடவில்லை. சந்தேகமே இல்லை.. கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திராவுக்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத பாஜகவுக்கு பாடம் புகட்டவே, அவரது ஆதரவாளர்கள் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டரோடு நின்றுவிடாமல், நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்ற வாசகத்தை சமூக வலைத்தளங்களிலும் பாஜகவினர் வேகமாகப் பரப்பி வருகின்றனர். இது பாஜக தலைமைக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திராவை எதிர்த்து வருணா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிட வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த தொகுதியில் விஜயேந்திராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனால் கடும் அதிருப்திக்குள்ளான பாஜகவினரை சமாளித்து விடலாம் என்றே முதலில் கட்சித் தலைமை நினைத்திருந்தது. ஆனால், வருணா தொகுதியில் பாஜக தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பாஜக தலைமைக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம் பிடித்துள்ளன.