சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில், இரு கோஷ்டிகள் இடையே, பிரச்னையில் அலை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் அந்த விஷயத்திற்காக இப்போது போலீசாரை அழைத்து டோஸ் விட்டிருக்கிறார்கள் முதல்வர் அலுவகல அதிகாரிகள்.  

தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் அச்சங்கத்தின் தலைவர் விஷால் கைது செய்யப்பட்ட அன்று பாரதிராஜா தலைமையில், ஒரு கோஷ்டியினர், முதல்வரை சந்திக்க, திடீரென தலைமை செயலகம் சென்றனர். அவர்கள் எதற்காக வருகிறார்கள் என்பது தெரியாமலே, போலீசாரும் அனுமதித்து விட்டனர். முதல்வரை சந்தித்து, அவர்கள் முறையிட்ட பிறகு தான், கோஷ்டி பிரச்னையால், சங்க கட்டடத்துக்கு பூட்டு போட்டதே, எடப்பாடிக்கு தெரிய வந்துள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அவர்களை முதல்வர் எடப்பாடி அனுப்பி வைத்துள்ளார்.

இருப்பினும், தனியார் சங்க பிரச்னையில், ஒரு கோஷ்டியை மட்டும் முதல்வர் எப்படி சந்திக்கலாம் என, சர்ச்சை கிளம்பியது. இதனால், அதிருப்தியான எடப்பாடி பாரதிராஜா கோஷ்டியை அனுமதித்தது யார்? எனக் கேட்டு கோபப்பட்டிருக்கிறார். அவர்களை அனுமதித்த போலீசாரை அழைத்து முதல்வர் அலுவலக அதிகாரிகள், கடுமையாக 'டோஸ்' விட்டிருக்கிறார்கள்.