தமிழ் சினிமா நடிகர்கள் தொடர்ந்து அரசியல் கட்சி துவங்குவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் எம்.ஜி.ஆரில் துவங்கி, சிவாஜி, விஜயகாந்த், சரத்குமார், டி.ராஜேந்தர், கமல், ரஜினி என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். 

இந்நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என தொடர்ந்து தேர்தலில் போட்டி போட்டு வெற்றி கண்ட நடிகர் விஷால், அவருடைய பிறந்த நாளான இன்று அரசியல் கட்சி துவங்கியுள்ளார்.

இவர் ஏற்க்கனவே சுயேச்சையாக, ஆர்.கே.நகர் தொகுதியில் நடத்தப்பட்ட இடை தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால் ஒரு சில காரணங்களால் இவருடைய மனு நிராகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒரு அரசியல் அமைப்பாக விஷால் மாற்றியுள்ளார், இந்த அமைப்பின் பெயரையும் புதிய கொடியையும் விஷால் அறிமுகம் செய்துள்ளார்.

வெள்ளை நிற கொடியில் மெரூன் கலரில்  வலது பக்கம் அன்னை தெரேசாவின் படமும், இடது புறம் அப்துல் கலாம் படமும் இடம்பெற்றுள்ளது. மேலே விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி என்கிற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. நடுவே விஷால் புகைப்படமும், அவரை சுற்றி உள்ள வளையத்தின் மேல் 'அணி சேர்வோம்', 'அன்பை விதைப்போம்' என எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. கீழே விஷால் துவங்கி உள்ள கட்சியின் பெயரான 'மக்கள் நல இயக்கம்' என்கிற பெயர் இடம்பெற்றுள்ளது.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தை தொடர்ந்து தமிழக அரசியலிலும் காலடி எடுத்து வைக்கும், விஷாலுக்கு மக்களின் ஆதரவு கிடைக்குமா...? ரசிகர்களை வைத்து அரசியல் களம் கண்டுள்ள விஷால் வெற்றி பெறுவாரா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.