ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த சந்திரகிரியை சேர்ந்தவர் நடிகை விந்தியா. தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நடிகை விந்தியா கடந்த 1999ம் ஆண்டு சங்கமம் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். பின்னர், தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு நடிகை பானுப்பிரியாவின் தம்பி கோபிகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் விவாகரத்தும் செய்து கொண்டார். தமிழில் 6 படங்களில் நடித்த நடிகை விந்தியா, சினிமா துறையில் இருந்து சற்று விலகி இருந்தார்.

அந்த நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் சாதனைகள், ஆளுமை திறனை கண்டு, அதிமுகவில் இணைந்தார். இதை தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் பல்வேறு ஊர்களுக்கு சென்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் செய்தார்.
இதில் எதிர்க்கட்சிகளான திமுகவில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், தேமுதிகவில் விஜயகாந்த், பிரேமலதா, காங்கிரசிஸ் குஷ்பூ உள்பட அனைவரையும் பிரச்சாரத்தின் போது “கிழி கிழி” என கிழித்து திணற செய்தார். இவரது அனல் பறக்கும் பிரச்சாரத்தால், அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி விந்தியாவின் ரசிகர்களும் அந்த பகுதிகளில் திரண்டனர்.

இதையடுத்து ஜெயலலிதாவால் கவரப்பட்டு வந்த நடிகை விந்தியாவுக்கு தலைமை கழக பேச்சாளர் அந்தஸ்து வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனால், அவரது பேச்சு திறன் மேலும் உயர்ந்தது. மேலும், அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, டீக்கடைகளில் டீ மாஸ்டராக இருந்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். டிபன் கடைகளில் பரோட்டா தயாரித்து கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதற்கிடையில் கடந்த 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். அன்று முதல் நடிகை விந்தியா, கலங்கி ஆடிப்போயுள்ளார். அந்த வருத்தத்தில் இருந்து இதுவரை அவர் மீளவில்லை. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. கட்சியினர் யாரிடமும் எவ்வித தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை விந்தியாவை, பத்திரிகையாளர் ஒருவர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, விந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேட்டார்.

அதற்கு நடிகை விந்தியா “அம்மாவை புகழ்ந்த வாயால், இனி நான் யாரையும் புகழ மாட்டேன். மறைந்த முதல்வர் அம்மா… என் தாய்க்கு இணையானவர். அவர் மறைவுக்கு பின், அரசியலுக்கு நான் முழுக்கு போடுவது என முடிவு செய்துவிட்டேன். இதையடுத்து அம்மாவை பற்றிய வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுத முடிவு செய்துள்ளேன்” என கூறியுள்ளார்.
