கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதால், ஒரு தரப்பினர் கோவிலில் திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் கிராமத்தில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலையை பிரதிஷ்டை செய்ய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வருவதாக ஊர்முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது இதனை கண்டித்து இந்த கிராம மக்கள் மத ரீதியாக பிளவுபடுத்தும் ராஜா எங்கள் ஊருக்கு வரக்கூடாது என்று அனைத்து கிராம மக்களும் மற்றும் திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து ஊர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டினர்.

இந்நிலையில்  நேற்று மாலை அரிநாச்சி கிராமத்துக்கு எச்.ராஜா வந்தார். அப்போது அவரை ஊருக்குள் நுழைய விடாமல் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி கறுப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கோயில் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இவர் இங்கு வந்தால் கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் அதனால் எச் ராஜா ஊருக்குள்  வரக்கூடாது என்று கிராம மக்கள் கடுமையாக தெரிவித்தனர். இதையடுத்து  போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஊருக்குள் நுழைய முயன்ற எச்.ராஜாவை திருப்பி அனுப்பினர்.


இப்பிரச்சனையில் கட்சி பாகுபாறின்றி திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள் என அனைத்து கட்சியைச் சேர்ந்த கிராம மக்களும் இணைந்து எச்.ராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.