தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

இதனால் ஊரக பகுதிகளில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட உள்ளூர் பிரமுகர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

வேட்பு மனுதாக்கல் தொடங்கிய நாளில் ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை வாங்கிச்சென்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கும், துணை தலைவர் பதவி ரூ.15 லட்சத்திற்கும் ஏலம் விடப்பட்டதாகவும், இதற்காக கூட்டம் நடத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி வாசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

அதாவது பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக சக்திவேல் என்பவர் இருந்தார். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் சக்திவேல், மீண்டும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பினார்.

இந்த நிலையில் நடுக்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கிராம மக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை அடுக்கடுக்காக கூறினர்.

இதன் தொடர்ச்சியாக ஒரு நோட்டில் எழுதிவைக்கப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அதில் நடுக்குப்பத்தில் திரவுபதியம்மன் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 

இதனிடையே நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட சக்திவேலும், துணை தலைவர் பதவிக்கு போட்டியிட முருகனும் பொதுமக்கள் சார்பில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

திரவுபதி அம்மன் கோவில் திருப்பணியை முடிப்பதற்காகவும், ஊர் மக்கள் நன்மையை கருதியும் இருவரும் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் மாவ்வட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் விசாரணை நடத்தி வருகிறார்.