மதமாற்ற தடைச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இதுபோன்ற விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இறந்த மாணவிக்கு நல்ல நீதி கிடைக்க வேண்டும்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த மைக்கேல்பட்டிக்குச் செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று பாஜக விசாரணைக் குழுவில் இடம்பெற்ற நடிகை விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.

அரியலூரைச் சேர்ந்த மாணவி, தஞ்சாவூரில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் மீது மதமாற்ற புகார் சுமத்தப்பட்டது. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்த பிறகு பூதாகரமாக வெடித்தது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக தேசிய தலைவர் நட்டா, விசாரணைக்குழு ஒன்றை அறிவித்தார். அதன்படி விஜயசாந்தி தலைமையிலான குழு இன்று அரியலூர் வடுகபாளையத்தில் உள்ள மாணவியின் இல்லத்துக்கு சென்று விசாரணை நடத்தியது. பின்னர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு விஜயசாந்தி குழு வந்தது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து பாஜக குழு சந்தித்தது. இந்த விவகாரம் தொடர்பாக விஜயசாந்தி குழு கேட்டறிந்தது. பின்னர் விஜயசாந்தி தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜயசாந்தி கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து நடந்த விபரங்களை எல்லாம் எடுத்து கூறியுள்ளோம். தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு சென்றுள்ளதால், கலெக்டர் பேசுவதற்கு சற்று தயக்கம் காட்டினார். இருப்பினும் நாங்கள் சொன்ன அனைத்து விவரங்களையும் கலெக்டர் முழுமையாக கேட்டுக்கொண்டார். எங்களைப் பொறுத்தவரை இறந்த மாணவியின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, மதமாற்ற தடைச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இதுபோன்ற விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இறந்த மாணவிக்கு நல்ல நீதி கிடைக்க வேண்டும். மதமாற்றம் தொடர்பாக மட்டுமல்ல, வேறு எந்த விஷயத்துக்காகவும் மாணவிகள் தற்கொலை செய்துக்கொள்வது மிகவும் தவறானது. எந்த விஷயமாக இருந்தாலும் மாணவிகள் தைரியமாக அதைச் சந்திக்க வேண்டும். பெற்றோர்பிள்ளைகள் மீது எவ்வளவு ஆசை வைத்திருப்பார்கள். தற்கொலை செய்துகொண்டு இறப்பது ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்தும் விடும். ஆனால், பின்னர் வாழ்க்கை முழுவதுமே உங்கள் பெற்றோர்கள் கஷ்டப்படுவார்கள். இதை புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வில் போராட வேண்டும். மாணவி படித்த மைக்கேல்பட்டிக்குச் செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே, நாங்கள் அங்கு செல்லவில்லை.” என்று விஜயசாந்தி தெரிவித்தார்.