நான் அரசியலில் பிழைக்க வரவில்லை, உழைக்க வந்திருக்கிறேன் நான் என்று நிகழ்ச்சி ஒன்றில் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.

விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது, தேர்தல் பிரச்சாரம் எனத் தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார். கட்சியில் படிப்படியாக முன்னிலைப்படுத்தப்பட்டுவரும் அவருக்கு இளைஞரணி பதவி கொடுக்க வேண்டும் என்று தேமுதிகவினர் வலியுறுத்திவருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விஜய பிரபாகரன்,  உழைத்த பணத்தில் வாங்கிய சொத்தை அடமானம் வைத்து மாணவர்களின் கல்விச் சேவைக்காகச் செலவிட்டதில்தான் கடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை எங்களால் சரிகட்டிவிட முடியும். 

தற்போது நடிகர் சங்கத்தில் பிரச்சினை என சொல்கிறார்கள். எங்க அப்பா அந்த காலத்திலேயே 5 கோடி ரூபாய் கடனாக இருந்த நடிகர் சங்கத்தின் பிரச்சினையைத் தீர்த்து, ஒரு கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்தவர். அதன்பிறகுதான் நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்து வெளியேறி கட்சி ஆரம்பித்தார். அதனால் எங்களின் கடன் பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொண்டு சரிசெய்வோம் என்றார்.

மேலும், விஜயகாந்த்திற்குப் பிறகு அவரது மகனான நான் தேமுதிகவுக்குள் வந்துள்ளதை வாரிசு அரசியல் என  சொல்கிறார்கள். நான் அரசியலில் பிழைக்க வரவில்லை, உழைக்க வந்திருக்கிறேன்.  தேமுதிக உற்சாகமாக இருக்கும் காலகட்டத்தில் நான் கட்சிக்குள் வரவில்லை. சோதனையான காலத்தில் தான் வந்துள்ளேன். என்று சொல்லிக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.