vijayakath master plans after speech therapy

தேர்தல் அரசியல் ரீதியாகவும், உட்கட்சி குழப்பங்களாலும் அநியாயத்துக்கு தேய்ந்து போய் கிடக்கிறது தே.மு.தி.க. இதில் விஜயகாந்தின் உடல்நிலை சோர்வுகள் வேறு சேர்ந்து கொண்டதால் அக்கட்சியினர் ஆற்றமாட்டாத கவலையில் உள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் சமீபகாலமாக கவனிக்க தக்க வகையில் உடல் நிலை தேறியிருக்கும் விஜயகாந்த் கட்சி நிகழ்வுகளில் தலைகாட்ட துவங்கியிருக்கிறார். காரைக்குடி பொதுக்குழுவில் அவருக்கு ‘பொதுச்செயலாளர்’ பதவியை வழங்கி புன்னகைத்துக் கொண்டது கட்சி. ஏங்கப்பா! என்று கேப்டனுக்கும் ஏக சந்தோஷம். 

அதன்பிறகு மெல்ல பொதுப் பிரச்னைகளில் தலை நீட்ட துவங்கியிருக்கிறார் விஜயகாந்த். அந்த வகையில் கடந்த வாரம் விழுப்புரத்தில் கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது அக்கட்சி. நிர்வாகிகளே எதிர்பாராத வண்ணம் எக்கச்சக்கமாக கூடியது கூட்டம். இந்த மாஸில் விஜயகாந்த் மெர்சலாக பேசியிருந்தால் ஆர்பாட்டம் செம ஹிட்டடித்திருக்கும். ஆனால் ரெண்டு கரும்பை கையில் பிடித்தபடி நெடுநேரம் உட்கார்ந்திருந்த விஜயகாந்த், பின் மைக்கை பிடித்து “தமிழ்நாடு எதில் முதலிடத்துல இருக்குதுன்னு நினைக்கிறீங்க? லஞ்சத்தில்தான்.” என்று இந்த ஆட்சியை நாலு வரி கிழித்துவிட்டு “தர்மயுத்தம் நடத்துறேன்னு கதைவிட்ட ஓ.பி.எஸ். சிவாஜி, கமலை விட பிரமாதமா நடிக்கிறார்.” என்று ஐந்து நிமிடத்துக்குள் பேச்சை முடித்துவிட்டு காரேறி பறந்துவிட்டார். 

லோக்கல் நிர்வாகிகள் வலுவான பாயிண்ட்ஸை எடுத்துக் கொடுத்தும் அதை பேச மறுத்த விஜயகாந்த், வர்புறுத்திய அவர்களை ‘யேய் போய்ய்யா போ!’ என்று தவிர்த்துவிட்டார். இவ்வளவு அருமையாக கூடிய கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விஜயகாந்த் தவறிவிட்டாரே என்று அக்கட்சியினருக்கு பெரும் வருத்தம். இது அப்படியே சுதீஸ் மூலமாக பிரேமலதாவுக்கு பாஸ் ஆக அவருக்கோ செம கோபம். வீட்டுக்கு வந்த விஜயகாந்திடம் பொறிந்து தள்ளிவிட்டாராம். ‘நான் என்ன பண்ணட்டும்?’ என்று விஜயகாந்த் கவலையாக, அதன் பின் அவரை தேற்றியிருக்கிறார்கள். 

விஜயகாந்தை பழையபடி பொது மேடைகளில் கர்ஜிக்க வைக்க அவருக்கு பேச்சு பயிற்சி (ஸ்பீச் தெரெபி) வழங்கப்பட்டு வருவதான தகவலும் கிளம்பியிருக்கிறது.
இந்த சூழலில் அவர் தலைமையில் அடுத்த ஆர்பாட்டத்தை அறிவித்துவிட்டது தே.மு.தி.க. வரும் 5-ம் தேதியன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆனைமலை - நல்லாறு அணைகட்டும் திட்டத்தை வலியுறுத்தி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். 

விழுப்புரம் போல் இதற்கும் பெரும் கூட்டம் சேர்க்க திட்டமிட்டிருக்கும் கொங்கு மண்டல தே.மு.தி.க., இந்த கூட்டத்தில் விஜயகாந்தை அமர்க்களமாக பேச வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம். உடுமலையை உலுக்கியெடுத்துவிடும் யோசனையில் இருக்கிறார்களாம். 

விழுப்புரம் போல் சொதப்பிவிடாமல் ஆளுங்கட்சியின் பொறுப்பற்ற ஆட்சி, எதிர்கட்சியான் தி.மு.க.வின் செயல்பாடற்ற நிலை, ஜெ., மறைவுக்கு பின் பாதுகாப்பாய் அரசியலுக்குள் கால் வைக்கும் நடிகர்கள் என பல விஷயங்களை அவர் தொட்டு துவைத்து பேசி மீண்டும் ஊடகங்களில் தே.மு.தி.க. முதலிடம் பெற வேண்டும் என்று விரும்புகிறார்களாம். 

இதை பிரேமலதாவிடம் ஒரு கோரிக்கையாக வைத்து, கேப்டனை அதற்கேற்றார் போல் தயார் செய்திட அவரையும் சம்மதிக்க வைத்திருக்கிறார்களாம். 
இவங்கல்லாம் திட்டம் போட்டு என்ன பயன் கேப்டன் அதுக்கு சம்மதிக்கணுமே? பழைய வீராவேசத்தோட நின்னு வெறித்தனமா பேசுவாரா கேப்டன், அவரு உடம்பு அம்புட்டு பிரஷரை தாங்குமா?...என்று இரண்டாம் கட்ட நிர்வாகிகள்தான் கவலையில் இருக்கிறார்கள்.