விஜயகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு தேமுதிகவின் மக்கள் பணிஎன்ற பெயரில்  அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்  சாலையில் இறங்கி மண் அள்ளிய சம்பவம் கட்சித் தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளான, ஆகஸ்ட் 25 அன்று வறுமை ஒழிப்பு தினமாகவும், மக்களுக்காக மக்கள் பணி என்றும் அறிவித்து, ஏழை எளிய மக்களுக்கு உணவு உடை உள்ளிட பொருட்கள் வழங்குவது, சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது, மரம் நடுவது, போன்ற பணிகளில் தேமுதிகவினர் ஆண்டு தோறும் ஈடுபட்டு வருகின்றனர். விஜயகாந்தின் பிறந்த தினம் நெருங்கிவிட்ட நிலையில் இந்தாண்டும் தேமுதிகவின் சார்பில்  மக்களுக்காக மக்கள் பணி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, அதின் ஒரு பகுதியாக விருகம்பாக்கம் பகுதியில் சேதமடைந்த சாலைகள் சீரமைத்தல், கழிவு நீர் வடிகால்வாய்களை சீரமைத்தல் , தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளில்  தேமுதிகவினர் ஈடுபட்டனர். 

அந்த பணிகளை தேமுதிக பொருளாலர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் நேரில் பார்வையிட்டார், தன் கட்சித் தொண்டர்கள் ஆர்வமுடன் பணியில் ஈடுபட்டிருந்ததை பார்த்த அவர் ஒரு கட்டத்தில்  தொண்டரிடம் இருந்த மண்வெட்டியை வாங்கி சாலைகளை சீரமைக்கும் பணியில் தானே ஈடுபட்டார், ஏதோ பெயரளவிற்கு என்று இல்லாமல், மண்ணை வெட்டி அவர் கூடையில் போட அவர்களின் தொண்டர்கள் அதை எடுத்துச் செல்ல பணிகள் படுஜோராக நடந்தது. அனைத்து பணிகளும் முடிந்த பின்னரே அவர் கிளம்பினார். ஒரு சித்தாள் ரேஞ்ஜிக்கு  மண்வெட்டி எடுத்து தெருவில் இறங்கி பிரேமலதா வேலை செய்ததை பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்து வாயடைத்து போயினர்.  

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக  போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாமல் அனைத்திலும் தோல்வியடைந்தது, அதுமட்டும் இல்லாமல் வாக்கு வங்கியை பொருமளவில்  இழந்தது, இப் படுதோல்விக்கு  காரணம் விஜயகாந்தின் உடல் நிலை என்று சொல்லப்பட்டாலும், கட்சித்தொண்டர்களிடம் பிரேமலதாவின் கராரான அனுகுமுறைகளும் ஒரு காரணம்  என சொல்லப்பட்டது,  இந்த நிலையில் தன் மீது விழுந்த கறையை போக்கவும், தொண்டர்கள் மத்தியில் நல்ல தலைவர் என்று பெயரெடுக்கவுமே  இந்த நாடகம் எனவும் அவரை தன் சொந்தக் கட்சிக்காரர்களே விமர்சிக்கின்றனர்.