தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில், 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்கள், மற்றும் வேட்பாளர்களுக்கும், தேமுதிக சார்பாக வாழ்த்துகள். இத்தேர்தலில் கூட்டணி கட்சி வெற்றிக்காக அயராது பாடுபட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள். மீண்டும் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் தேமுதிக தொடர்ந்து அயராது பணியாற்றும்’’ என்று தெரிவித்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது. கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவிகிதத்தை விட மிகவும் மோசமாக 2.8 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. தேமுதிகவுக்கு இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளதால்; விஜயகாந்த் குடும்பம் சோகத்தில் உள்ளது. இந்த நிலையிலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளதற்காக விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.