விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ வசந்தகுமார் மக்களைத் தேர்தலில் நின்று எம்.பி. ஆகிவிட்டார். இதையடுத்து இந்த இரண்டு தொகுதிகளும் காலியாக இருந்தன.

திமுக கூட்டணியை பொறுத்தளவில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் களமிறங்குகின்றனர். இதே போல் அந்த இரண்டு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியும் களம் இறங்குகிறது.

இந்நிலையில் இந்த இரு தொகுதிகளுக்கும், வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதிகளில்  அதிமுக போட்டியிடுகிறது. விக்ரவாண்டி தொகுதிகள் முத்தமிழ்ச் செல்வன், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் அதிமுக சார்பில் களம் இறங்குகிறார்கள்.

இதனிடையே இந்த இரு தொகுதி இடைத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரி, அக்கட்சித் தலைவர் விஜயகாந்தை சமீபத்தில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசசாமி விஜயகாந்த்தை போனில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியிருந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும், அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக, முழு ஆதரவு அளிக்கும். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில், தேமுதிக தொண்டர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் அளித்து அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு உழைத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.