அதிமுக கூட்டணியில் தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் என ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு தொகுதியில் தேமுதிக போட்டியிடுகிறது.  “தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பங்கேற்பார். ஆனால், பொதுக்கூட்டங்களில் பேச மாட்டார்” என அக்கட்சியின் துணை செயலாளர் சுதிஷ் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால், தேமுதிக  தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். 
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்துக்கு பதிலாக அவருடைய இரு மகன்களும் ஈடுபட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக் காலமாக விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். தற்போது அவருடைய இன்னொரு மகன் சண்முக பாண்டியனையும் களத்தில் இறக்கிவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் தேமுதிக போட்டியிடும் 4 தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
 அண்மையில் விஜயகாந்தை சந்திக்க வந்த தலைவர்களை, “ஏண்டா எங்க வீட்டு வாசல்ல வந்து நிக்குறீங்க” என்று விஜய பிரபாகரன் பேசியது சர்ச்சையானது. அதுபோல சர்ச்சையாகப் பேசாமல் இருக்க இருவருக்கும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுவருவதாகவும் சொல்லப்படுகின்றன. விஜயகாந்துக்குப் பதிலாக அவருடைய இரு மகன்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், தேமுதிக  தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.