சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழகத்தில் சரியான தலைமைக்கான வெற்றிடம் உள்ளதாக ரஜினி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ரஜினி என்ன அரசியல் தலைவரா என்று கேள்வி எழுப்பிய அவர், மறுநாள் அளித்த பேட்டியில் கமலையும் விமர்சித்தார். “வயதான பிறகு நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் அவர்களுக்கும் ஏற்படும்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  பாஸ்கரனிடம்,  நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், , “விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார், அது என்ன ஆனது பார்த்தீர்களா? இனி நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அது செல்லுபடி ஆகாது” என்று பதிலளித்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சு அதிமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றது. 

வரும் உள்ளாட்சித் தேர்தலையும் அதிமுகவுடன் இணைந்து சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேமுதிகவுக்கு எதிரான அமைச்சர் பாஸ்கரனின் பேச்சு  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.