வழக்கம்போல் திமுக, அதிமுக என இரு தரப்பிலும் பேரம் பேசிக் கொண்டிருந்த தேமுதிகவிற்கு 4 சீட் தருகிறோம் விருப்பம் இருந்தால் வாங்க, இல்லைன்னா தாராளமா எங்க வேணா போங்க என்று  கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டாராம் திமுக தலைவர் ஸ்டாலின்.

அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து விஜயகாந்த் நாடு திரும்பிய உடனே தேமுதிகவின் அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. திருநாவுக்கரசர் தொடங்கி பியூஷ் கோயல், ரஜினி, ஸ்டாலின் என அனைவரும் அவரது வீடு தேடி சென்று உடல்நலன் விசாரித்தனர். இந்த சந்திப்புகளின் போது அவரவர்களின் அரசியல் கணக்குகளும் பேசப்பட்டதாக செய்திகள் கசிந்தன. இதை அடுத்து சரிந்துகிடந்த தேமுதிகவின் இமேஜ் மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியது. 

இதையே சாக்காக வைத்து பிரேமலதாவும், சுதீஷூம் அதிக சீட்டுகளையும், அதைவிட அதிக நோட்டுகளையும் கேட்க ஆரம்பித்ததில் தொடங்கியது சிக்கல். 
பாமகவிற்கு 7 சீட் கொடுத்துவிட்டதால், எங்களுக்கும் அதையே கொடுங்கள் என்று நின்று பார்த்தார்கள் தேமுதிக தரப்பில். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் திமுக தரப்பில் பேரத்தை தீவிரமாக்கினார்கள். ஆனால் தேமுதிகவின் இன்றைய பலத்தை துல்லியமாக எடை போட்டு வைத்திருந்த திமுக தலைமை, அதிகபட்சம் 4 சீட் தருகிறோம் என்றது.

 

சீட்டை விட உதவிகளில் கருத்தாக இருந்த தேமுதிக தரப்பு, அறிவாலயத்தை அகல வாயைப் பிளக்க வைக்கும் உதவியை கேட்டதாம். வாய்ப்பே இல்லை, நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் திமுக தரப்பில். அத்தோடு நிற்காமல் ஸ்டாலினின் பிறந்தநாள் முடிந்த கையோடு, மற்ற கூட்டணி விவரங்களை இறுதி செய்வது என்பதிலும் உறுதியாக இருக்கிறதாம் அறிவாலயத்தரப்பு.  இப்போது தேமுதிகவிற்கு அதிமுக மட்டுமே ஒரே சாய்ஸ். ஆனால் இந்த விஷயத்தை ஸ்மெல் செய்துவிட்ட எடப்பாடி, இப்போது விஜயகாந்தை எப்படி டீல் செய்யப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

முன்பு வாக்களித்ததைப் போல 4 சீட்டும், தொகுதி செலவு, இதுதவிர தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் குடும்பத்திற்கு உதவி என்ற முந்தைய டீலிங்கிலேயே நிற்பார்களா, அல்லது அவர்களும் மீண்டும் பேரத்தை குறைக்கப் பார்ப்பார்களா எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தேமுதிக. எங்கு செல்லும் இந்த பாதை எனத் தெரியாமல் தவிக்கிறார் விஜயகாந்த்.