vijayakanth dmdk
நடிகை மஞ்சுளாவின் மரணத்திற்கு வாழ்த்து கூறி, கட்சி பொதுக்கூட்ட மேடையில் தொண்டனை பார்த்து அழுது, அப்துல்கலாமின் இறுதி அஞ்சலியில் எல்லோரும் நிற்க தான் மட்டும் அமர்ந்து...என்று அநியாயத்துக்கு தாறுமாறு அரசியல் செய்து கொண்டிருந்தார் விஜயகாந்த்.
தமிழகத்தின் அரசியல் பிக் பாஸ் வீட்டிலிருந்து தே.மு.தி.க. எலிமினேட் ஆகும் நேரத்தில் திடீரென துள்ளி எழுந்திருக்கிறார் அவர். சமீபத்தில் காரைக்குடியில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி ‘சித்தப்பூ நாங்களும் அரசியல்ல இருக்கோம்ல!’ என்று நினைவூட்டினார். கழக நிரந்தர பொதுச்செயலாளர் எனும் புதிய பதவியுடன் செம்ம கெத்தாக சென்னை வந்து சேர்ந்தார். ரெண்டு மூன்று நாட்களாக வீடு , அழுவலகம் என்று இருந்தவர் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை நேற்று தமிழகத்தின் புதிய கவர்னர் புரோகித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு திரும்பினார்.
ராஜ்பவனை விட்டு வெளியே வந்த அவரை சூழ்ந்தது நிருபர் படை. ‘உள்ளாட்சி தேர்தலில் யாரோடு கூட்டணி வைப்பீர்கள்?’ என்று ஒரு நிருபவர் உசுப்பிவிட, ‘கூட்டணி உள்ளிட்ட எல்லா விஷயத்திற்கும் பெரிய கும்பிடு. இனி கூட்டணியே கிடையாது. உள்ளாட்சி மட்டுமல்ல எல்லா தேர்தல்களிலும் தனித்துதான் போட்டி.’ என்று ஒரே போடாக போட்டுவிட்டு நகர்ந்தார்.
இந்த விஷயம் எலெக்ட்ரானிம் மீடியாக்கள் மற்றும் வாட்ஸ் ஆப் மூலமாக தமிழகமெங்கும் பரவியது. மாநிலமெங்கும் இருக்கும் தே.மு.தி.க.வினர் இந்த தகவலை கேள்விப்பட்டு திகிலாகிவிட்டார்கள். பலருக்கோ ஏக டென்ஷன்.
விஜயகாந்த் வீடு வந்து சேர்வதற்குள் அவரது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் தமிழகம் முழுக்க இருக்கும் தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் இருந்து ஏகப்பட்ட போன்கள். அட்டெண்ட் செய்த நபர்களுக்கு காது அவிந்துவிட்டது.
அப்படி என்னதான் சொன்னார்களாம் ?...
இதோ இதுதான்...
”
* கேப்டனுக்கு என்னாங்க பிரச்னை? இப்படி தனித்து போட்டின்னு முடிவு பண்ணியிருக்கார்! கட்சிக்காரங்களெல்லாம் அவ்ளோ வசதியாவா இருக்கோம். செயற்குழு, பொதுக்குழுவுக்கு நிதி கொடுக்குறதுக்குள்ளே நாக்கு தள்ளிப்போச்சு. இதுல தனித்து தேர்தலா? வெளங்கிடும்!
* நம்ம கட்சி தனிச்சு நிற்கிற தெம்பு இருந்த காலமெல்லாம் மலையேறி போச்சு. இப்போ வலுவான கட்சியோட கூட்டணி இல்லேன்னா சுயேட்சைக்கு முந்துன லெவல்ல இருப்போம். அதுதான் யதார்த்தம்!
* தனிச்சே போட்டியிடுவோமுங்க. ஆனா ஒவ்வொரு தொகுதிக்கும் ஆகுற அத்தனை செலவையும் கேப்டனையே தரச்சொல்லுங்க.
* 2016 தேர்தல்ல தி.மு.க.வோடு போயிருந்தா இந்நேரம் இருபது முப்பது எம்.எல்.ஏ.க்களோடு எதிர்கட்சி வரிசையில உட்கார்ந்திருக்கலாம். அதை கெடுத்த கேப்டன், இன்னமும் மனம் மாறலையா?
* தேர்தல்ல தனியாதான் நிற்பேன்னா கட்சியிலேயும் தனியாவே கேப்டன் நிக்கட்டும். நாங்க கெளம்புறோம்.
* கேப்டன் அடிப்படையில நல்ல மனுஷந்தான் ஆனா அவரோட அரசியல் இப்பல்லாம் யதார்த்தத்துக்கு ஒத்து வரமாட்டேங்குது. இப்படி கூட்டணி கிடையாது, தனித்து தனித்துன்னு அவர் முடிவு பண்ணிட்டா நாங்களும் வெளியேறுற முடிவை எடுத்துடுவோம். அடுத்த ஜென்மத்துல சந்திக்கிறோமுன்னு சொல்லிடுங்க.
* இருக்குற அத்தனை மாவட்டங்கள்ள சில மாவட்ட செயலாளர்களை தவிர அத்தனை பேரும் கடன்ல கெடக்குறோம். இந்த நிலையில தனியா தேர்தலை சந்திக்கணும்னா செலவுக்கு எதை அடமானம் வெக்கிறது?
* கேப்டனுக்கு அவரோட சினிமா மொழியில சொல்லனும்னா நம்ம கட்சி மாஸ் ஹிரோவா இருந்த காலமெல்லாம் மலையேறிடுச்சு. குணசித்திர வேஷம், அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளைன்னு வாழ்ந்துட்டு போயிடணும்.”
என்று விரிந்ததாம் புலம்பல்கள்.
ஆனால் இதில் பேசிய சிலர் சினிமா மொழியிலெல்லாம் பேசியிருப்பதை பார்த்தால் ஒரு வேளை தி.மு.க. காரங்க சிலரும் உண்மையான தே.மு.தி.க.க்காரனுக்கு நடுவுல போன் போட்டு கலாய்க்கிறானுவளோன்னு டவுட்டாம்.
எது எப்படியோ வந்து விழுந்த குமுறல்களை விஜயகாந்தின் காதுகளுக்கு பதமாய் கொண்டுபோய் சேர்த்துவிட்டனர் மாநில நிர்வாகிகள்.
எல்லாத்தையும் கேட்டுவிட்டு ‘ஆங்ஹ்!’ என்று ஒரு ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார் கேப்டன்
ஆஹாங்!
