விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி  ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, வரும்  21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. 

அதன் கூட்டணியில், தே.மு.தி.க., - பா.ஜ., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில், தே.மு.தி.க.,விற்கு, விக்கிரவாண்டி தொகுதியில், ஓரளவிற்கு செல்வாக்கு உள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, இந்த ஓட்டு வங்கி கைகொடுக்கும் என, அக்கட்சி தலைமை கணக்கு போடுகிறது.

எனவே, தேமுதிகவின் ஆதரவை பெறுவதற்காக, அக்கட்சி தலைவர், விஜயகாந்தை, அமைச்சர்கள் ஜெயகுமார், சீனிவாசன், தங்கமணி ஆகியோர், சந்தித்து, ஒரு மணி நேரம் பேசினர்.இடைத் தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு விஜயகாந்த் ஆதரவு தர வேண்டும் என அப்போது அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

அப்போது,  உள்ளாட்சி தேர்தலில், கணிசமான இடங்களை, தங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும்  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும், தேமுதிக  வேட்பாளர்களின் செலவை, அதிமுக ஏற்க வேண்டும்  எனவும்  இரண்டு நிபந்தனைகள் விதித்துள்ளார். 

இதற்கு சம்மதித்தால், இடைத்தேர்தலில் ஆதரவளிப்பதாக, அவர் கூறியதாக தெரிகிறது.இது குறித்து, முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து விட்டு, முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் கூறி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.