தே.மு.தி.க.விற்கு தமிழகத்தில் தற்போதுள்ள 5 சதவீத வாக்கு வங்கியை முடிந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மு.க.ஸ்டாலின் காய் நகர்த்த தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, சட்டமன்ற தேர்தலிலும் சரி தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டும் என்பதில் கலைஞர் உறுதியாக இருந்தார். காரணம் அந்த கட்சிக்கு அப்போது இருந்த வாக்கு வங்கி. கடந்த 2011 தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைய காரணமே அ.தி.மு.க – தே.மு.தி.க கூட்டணி தான். இதனை உணர்ந்தே தே.மு.தி.கவுடன் கூட்டணி வைக்க கலைஞர் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்.

 

தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்கும் பொறுப்பை ஸ்டாலின் விரும்பி பெற்றுக் கொண்டார். ஆனால் அவர் விஜயகாந்துடன் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ பேச மறுத்தார். இதே போல்விஜயகாந்தும் ஸ்டாலினிடம் பேசவோ, அவரை சந்திக்கவோ மறுத்துவிட்டார். இதன் காரணமாகவே தி.மு.க – தே.மு.தி.க கூட்டணி சட்டமன்ற தேர்தலில் அமையவில்லை. இதனால் இரண்டு கட்சிகளுக்குமே கடந்த தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

 

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும்  மாவட்டச் செயலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக தி.மு.க உள்ளிட்ட கட்சிகளில் ஐக்கியமாகினர். இருந்தாலும் கூட தே.மு.தி.க.விற்கு என்று 5 சதவீத வாக்குகள் நிலையாக இருக்கிறது என்பது தான் தி.மு.கிவிற்கு அண்மையில் கிடைத்த ரிப்போர்ட். இந்த நிலையில் தான் தி.மு.க தலைவரான ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

 இதுநாள் வரை ஸ்டாலினை எதிரியாகவே பார்த்து வந்த விஜயகாந்த், அவருக்கு நேசக்கரம் நீட்டியதாகவே இந்த வாழ்த்தை அரசியல் நோக்கர்கள் பார்த்தனர். இந்தநேசக்கரத்தை பற்றிக் கொள்ளும் வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய கேப்டன் மேலும் உடல் நலன் பெற வேண்டும் என்று ஸ்டாலின் ட்விட்டரில் தனது விருப்பத்தை தெரிவித்தார். இப்படி இரண்டு கட்சி தலைவர்கள் இடையே ஒரு சுமூகமான சூழல் உருவாகி வரும் நிலையில், தே.மு.தி.க.விற்க என்று உள்ள 5 சதவீத வாக்கு வங்கியை பயன்படுத்திக் கொள்ள ஸ்டாலின் விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதற்காக உடல்நிலை தேறியுள்ள கேப்டனை நேரில் சென்று சந்திக்கலாமா என்கிற யோசனையில் கூட ஸ்டாலின் உள்ளதாக கூறப்படுகிறது.