vijayabaskar special pooja in kanchi temple

தண்டனையில் இருந்த தப்பிக்க ஒரே வழி, தவறு செய்யாமல் இருப்பதுதான். ஆனால், எல்லா தவறுகளையும் செய்துவிட்டு, இறைவனிடம் போனால், அவன் எப்படி காப்பாற்றுவான்?.

ஆனாலும், காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் என்ற சிவ பெருமான், குறைந்த பட்சம், வழக்கின் வீரியத்தையாவது குறைப்பான், அதன் மூலம் ஜாமீனாவது கிடைக்கும் என்பதுதான் அரசியல்வாதிகளின் நம்பிக்கையாக இருக்கிறது.

அதனால்தான், வழக்கில் சிக்கிய அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் காஞ்சி வழக்கறுத்தீஸ்வரரை விடாமல் பிடித்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு ஊரிலும் காரண காரியங்களோடு எழுந்தருளி இருக்கும் சிவபெருமான், காஞ்சிபுரத்தின் ஒரு இடத்தில், வழக்கை தீர்த்து வைப்பவனாக எழுந்தருளி இருக்கிறான்.

இந்த சிவனை வழிபட்டால், வழக்குகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். அதனால், மக்களின் வழக்குகளை தீர்த்து வைக்க வேண்டிய தலைவர்கள் பலரும், தங்கள் மீதான வழக்கை தீர்த்துக் கொள்ள இங்கு வந்து செல்கின்றனர்.

அண்மையில் வருமான வரித்துறை சோதனைக்கு இலக்காகி, அவஸ்தையில் அல்லாடும் அமைச்சர் விஜயபாஸ்கர், சமீபத்தில் இந்த கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு சென்றிருக்கிறார்.

ஜெயலலிதா சார்பாக சசிகலா இங்கு வந்து வழிபட்ட பிறகே, டான்சி வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபோது, பன்னீர்செல்வம் இங்கு வந்து வழிபட்டு, சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னரே, குமாரசாமியின் தீர்ப்பால் வெளியில் வந்தார் ஜெயலலிதா.

2 ஜி வழக்கில் சிக்கி கனிமொழி திகார் சிறையில் இருந்த போது, தமக்கு நெருக்கமான ஒரு பெண் எம்.பி யை, இங்கு அனுப்பி வைத்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினார் ராஜாத்தி அம்மாள். அதன் பின்னரே கனிமொழி ஜாமினில் வெளியில் வந்தார். 

பீப் பாடல் சர்ச்சையில் நடிகர் சிம்பு படாத பாடு பட்டபோது, அவரது தந்தை ராஜேந்தர், இங்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்ததை அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்பின.

அதேபோல், விஜயகாந்த், ப.சிதம்பரம் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து, சிறப்பு பூஜைகள் நடத்திவிட்டு செல்வது வழக்கம்.

அந்த வகையில்தான், அமைச்சர் விஜயபாஸ்கரும், இந்த கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்திவிட்டு சென்றுள்ளார். வழக்கறுத்தீஸ்வரர் அவருக்கு என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.