புதுக்கோட்டையில் விரைவில் ஒரு லட்சம் பேரை கூட்டி தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க உள்ளதாகவும் அப்போது தினகரன் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்ற உள்ளதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டையில் கடந்த வாரம் நடைபெற்ற அ.ம.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கரை மிக கடுமையாக விமர்சித்தார். விஜயபாஸ்கர் குட் டாக்டர் இல்லை என்றும் அவர் குட்கா டாக்டர் என்று விமர்சித்தார். மேலும் விஜயபாஸ்கர் வீடு ஒரு அலிபாபா குகை என்றும், அதற்குள் நகைகளும், பணமும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தினகரன் கூறினார்.

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டுக்கு வராத அமைப்புகளே இல்லை என்று தெரிவித்த தினகரன், ஆர்.கே.நகர் தேர்தலில் தீவிரமாக வேலை பார்த்த விஜயபாஸ்கர் என்னை வெற்றி பெறச் செய்ய ஆர்வமாக இருப்பதாக கருதினேன். பின்னர் தான் தெரிந்தது அவர் ஈ.பி.எஸ் உடன் சேர்ந்து தேர்தலை நிறுத்த வேலை பார்த்துள்ளார் என்றும் தினகரன் குறிப்பிட்டார். மேலும் தன்னை அண்மையில் சந்தித்த விஜயபாஸ்கர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை கைவிட்டுவிட்டதாக புலம்பியதாகவும் அதிர்ச்சி தகவலை தினகரன் வெளியிட்டார்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று இரவு அ.தி.மு.க கலைநிகழ்சசி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேச வந்த விஜயபாஸ்கர் தினகரன் குறித்து எதுவும் பேசாமல் இருந்தார். அப்போது தொண்டர்கள் தினகரனுக்கு பதிலடி கொடுக்குமாறு கோஷம் போட்டனர். அதற்கு யாரும் அவசரப்படாதீர்கள், ஒரு வாரம் மட்டும் பொறுத்திருங்கள் பலரின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்ற உள்ளேன் என்றார்.

புதுக்கோட்டையில் போட்டி கூட்டம் நடத்தம் உள்ளதாகவும் அப்போது பலரின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றும் வகையில் பல்வேறு தகவல்களை வெளியிட உள்ளதாகவும் விஜயபாஸ்கர் கூறினார். தான் ஏற்பாடு செய்ய உள்ளதை கச்சேரி என்று கூட கூறலாம் என்றும், அந்த கச்சேரி பலரை தோலுரித்து காட்டும் வகையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் விஜயபாஸ்கர் எந்த இடத்திலும் தினகரன் பெயரை குறிப்பிடவில்லை.

இருந்தாலும் போட்டிக் கூட்டம் என்று கூறியுள்ளதால் கடந்த வாரம் நடைபெற்ற தினகரன் கூட்டத்திற்கு போட்டியாக கூட்டம் நடத்த உள்ளதையே விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்ட போது அவருக்கு வலதுகரமாக இருந்தவர் விஜயபாஸ்கர்.

இதனால் தான் அப்போது விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடைபெற்றது. மேலும் கோடிக்கணக்கான ரூபாய் ஆர்.கே.நகரில் செலவிடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயபாஸ்கரே தினகரன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றப்போவதாக கூறியுள்ளதால் அரசியல் வட்டாரம் சூடு பிடித்துள்ளது.