vijayabaskar planning to change party du to IT raid
வருமான வரி துறை மற்றும் அமலாக்கத்துறை கொடுத்து வரும் நெருக்கடியால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கர், அணி மாற தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் விஜய பாஸ்கரின் பணப் பரிவர்த்தனைகள், வெளி நாட்டு முதலீடுகள், அந்நியச் செலாவணி கணக்குகள் ஆகிய அனைத்தும் வருமானவரி அதிகாரிகளால் திரட்டப்பட்டுள்ளது.
இதுவரை, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எந்தெந்த வழிகளில் பணம் வந்தது? 100 கோடி ரூபாயில் புதுக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு யார் பெயரில் டெண்டர் ஒதுக்கப்பட்டது.

விஜயபாஸ்கர் அமைச்சர் ஆனதும், சுகாதாரத்துறையில் நடந்த, பணி நியமனங்கள், பணி இட மாற்றங்கள், மருத்துவ உபகரணங்கள் வாங்கிய பட்டியல் ஆகியவை ஒன்றுவிடாமல் அதிகாரிகளால் திரட்டப்பட்டுள்ளது.
அந்த ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் எடுத்து காட்டியே, அதிகாரிகள் அவரிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டு, அவரால் மறுத்து பேச முடியாத அளவுக்கு திணறடித்துள்ளனர்.
ஆரம்பத்தில், எதை எதையோ பேசி வழக்கமாக திசை திருப்பும் முயற்சியில் அவர் ஈடுபட்டாலும், ஆதாரங்களை காட்டி அதிகாரிகள் பேசியதால், அவர் கண்கலங்க ஆரம்பித்து விட்டார்.
அதன் பின்னர் அவரை செல்லமாக மிரட்டும் பாணியில், இதுபோன்ற நெருக்கடியில் இருந்து, தப்பிக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. நீங்கள் அணி மாற தயாரா? என்று அவரிடம் போட்டு வாங்கியுள்ளனர் அதிகாரிகள்.

அதற்கு, விஜயபாஸ்கர் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்திருக்கிறார். அதற்கு அவர் பணியவில்லையென்றால், கைது நடவடிக்கையை சந்திக்க நேரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆடிப்போயுள்ள விஜயபாஸ்கர், இந்த பிரச்சினையில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று எண்ணுவதால், அவர் அணி மாற தயாராகி விட்டார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அவருடன் சேர்ந்து மேலும் 8 அமைச்சர்களுக்கும், விஜயபாஸ்கர் வாயிலாகவே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்களும் விரைவில் அணி மாற தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது.
