vijayabaskar getting into trouble again and again

சசிகலா உறவு பெண்ணை மனம் முடித்ததால், மன்னார்குடி கும்பலின் செல்ல பிள்ளையாக விளங்கிய விஜயபாஸ்கருக்கு, கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்குக்கு கொஞ்சமும் குறைவில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, தமது அடியாட்கள் மூலம் அமைச்சர்களை கண்காணித்து முதல், கூவத்தூரில் எம்.எல்.ஏ க்களை பாதுகாத்தது வரை, விஜயபாஸ்கருக்கு முக்கிய பங்கு உண்டு.

அதே கோதாவில், தினகரனில் தளபதியாக மாறி, முதல்வர் தொடங்கி எந்த அமைச்சர்களையும் கொஞ்சம் கூட மதிக்காமல், தனிக்காட்டு ராஜாவாக வலம் வரத்தொடங்கினார் அவர்.

அது போதாது என்று, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரவு செலவுகளை கவனிக்கும், கணக்குப்பிள்ளையாகவும் அவரை நியமித்தார் தினகரன். அங்கிருந்துதான் சிக்கல் ஆரம்பித்தது அவருக்கு.

பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி, அவரது வீடு மற்றும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்திய வருமான வரி துறையினர், அவரது மற்ற பண பரிவர்த்தனை மற்றும் விதி மீறல் தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி விட்டனர்.

அதற்காக, நேற்று நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, 5 மணி நேர விசாரணையில், கலங்கி கண்ணீர் விட்டு ஒரு வழியாக சமாளித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், அவரது கல்குவாரியில் நடைபெற்ற விதி மீறல்களும், அதிகாரிகளுக்கு தெரிய வர, அங்கும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. 

புதுக்கோட்டை திருவேங்கை வாசலில் அமைச்சர் விஜயபாஸ்கர் 15 ஆண்டுகளாக இந்த குவாரியை நடத்தி வருகிறார். அதில் விதியை மீறி குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவது தெரிய வந்தது. 

அதுபற்றி மத்திய பொதுப்பணித்துறைக்கு அறிக்கை அனுப்பினர். அதன் அடிப்படையில், டெல்லியில் இருந்து வந்த மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகள் 10 பேர், குவாரியில் ஆய்வு செய்து வருகின்றனர்.

குவாரியில் அரசு அனுமதியை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா? கனிம வளத்துறையின் விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு கற்கள் வெட்டப்படுகிறதா? முறைப்படி குவாரி இயங்குகிறதா? என அங்கு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

என்ன செய்வது, பட்ட காலிலேயே படும்... கெட்ட குடியே கெடும் என்பது, அமைச்சர் விஜயபாஸ்கர் விஷயத்தில் உண்மையாகி விட்டதே என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

உயிரை காப்பாற்றும் மருத்துவ படிப்பு படித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அடியாட்களை எல்லாம் வைத்து அரசியல் நடத்தும் அளவுக்கா நடந்து கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.