முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கருக்கு மக்கள் மத்தியில் தனி மரியாதை உண்டு. அதற்கு காரணம் அவரது துடிப்பான, துணிச்சலான செயல்பாடுகள் தான். அமைச்சர் விஜயபாஸ்கர் இக்கட்டான சூழல்களில் களத்தில் இறங்கி மக்கள் சேவையை மனதாரவும் சிறப்பாகவும் செய்வதால், அவரது செயல்பாடுகள், எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான ஆட்சிக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. 

2015 சென்னை வெள்ளம், 2016 வர்தா புயல் ஆகிய இயற்கை பேரிடர்களின்போது, மக்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் உறுதிசெய்யும் விதமாக சுகாதாரத்துறை சார்ந்த நடவடிக்கைகளை அவர் சிறப்பாக மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல் டெங்கு காய்ச்சல் தமிழகத்தை ஆட்டிப்படைத்த போதும், அமைச்சராக இருந்தாலும் அடிப்படையில் ஒரு மருத்துவரான விஜயபாஸ்கர், திறம்பட செயல்பட்டார். 

இந்நிலையில், தற்போது கொரோனா சிகிச்சை பணிகள் மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்வதிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் அசத்துகிறார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதியானதுமே, தடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. கொரோனா பாதிப்பு அதிகரிக்க, அதிகரிக்க, தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறிதல், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தி, கண்காணித்து அவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் அதேவேளையில், கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்தார். 

கொரோனா தடுப்பு பணிகளிலும் சிகிச்சை பணிகளிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறந்து விளங்குகிறது. அதற்கு தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளும் தமிழ்நாடு சிறந்த மருத்துவ உட்கட்டமைப்பை பெற்றிருப்பதும்தான் காரணம். மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்தியதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் பெரும்பங்குண்டு. 

கொரோனாவிலிருந்து தப்பிக்க தனிமைப்படுதலே வழி. ஆனால், தனது உயிரையும் துட்சமாக நினைத்து, அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை நேரில் பார்வையிடுவது, தடுப்பு பணிகளை கண்காணிப்பது, செய்தியாளர்களை சந்திப்பது என பம்பரமாக சுற்றித்திரிந்து பணியாற்றிவருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். செய்தியாளர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் மறுக்காமல் பண்புடன் பதிலளிக்கும் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பாதிப்பு குறித்த அப்டேட்டுகள் ஆகிய விஷயங்களை மிகவும் வெளிப்படையாக கூறுவதுடன், மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசுவது மட்டுமல்லாமல் அதை செயலிலும் காண்பித்துவருகிறார். 

தமிழ்நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிகபட்சமாக 58 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தை தொடர்ச்சியாக தொடர்புகொண்டு தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனை மையங்களை அமைக்க, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட அதிகமான(சராசரியாக தினமும் 11 ஆயிரத்துக்கும் அதிகமான) பரிசோதனைகள் செய்ய முடிகிறது.

அலுவல் ரீதியான பணிகளை மேற்கொள்ளும் அதேவேளையில் களத்தில் இறங்கியும் அசத்திவருகிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் கொரோனா வார்டுகளில் தொடர்ச்சியாக, பயமின்றி நேரடியாக விசிட் செய்துவரும் அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று தாம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளுக்கு நேரடியாக சென்று சிகிச்சை பணிகளை பார்வையிட்டதுடன், நோயாளிகளிடமும் நலம் விசாரித்தார். 

தமிழ்நாடு இக்கட்டான சூழலை சந்திக்கும்போதெல்லாம் களத்தில் முதல் ஆளாக நிற்கும் விஜயபாஸ்கர், தனது துறை சார்ந்த விவகாரம் கொரோனா என்பதால், சுயநலமில்லாமல் தனது உடல்நலனுக்கு முன்னுரிமை கொடுக்காமல், மக்களின் பிரதிநிதியாக மக்களுக்காக களத்தில் இறங்கி பம்பரமாக சுற்றி சுற்றி சேவையாற்றிவருகிறார். அவரது மக்கள் சேவையை, மக்கள் உண்மையாகவே வியந்து பாராட்டுகின்றனர். அவரது மக்கள் சேவை தொடரட்டும்..