கூட்டணி கை கூடி வரும் நிலையில் கேப்டன் மகன் விஜயபிரபாகரன் கூறும் சில கருத்துகள் தே.மு.தி.கவின் உயர்மட்ட நிர்வாகிகளை கடுப்படையச் செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக தி.மு.க மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தேமுதிகவிற்கு ரத்தின கம்பளம் விரித்துள்ளது. அதிலும் அதிமுக தரப்பு தற்போது 5 மக்களவை சீட் ஒரு மாநிலங்களவை சீட் என்று பேசிக் கொண்டிருக்கிறது. தி.மு.க தரப்போ 3 மக்களவை சீட், ஒரு மாநிலங்களவை சீட் என்று ஆஃபர் கொடுத்துள்ளது. இரண்டு கட்சிகளுடனுமே சுதீஷ் மிகவும் தீவிரமாக கூட்டணி குறித்து பேசி வருகிறார்.

 

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர பா.ஜ.கவும் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறது. விரைவில் மோடி சென்னை வர உள்ளார். அப்போது நடைபெறும் கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தை பங்கேற்க செய்துவிட வேண்டும் என்பது தான் தற்போது அதிமுக பா.ஜ.கவின் மிகப்பெரிய பணியாக உள்ளது. ஆனால் தேமுதிக தரப்போ திமுகவுடன் கூட்டணி சேர்வதில் தான் ஆர்வம் காட்டி வருகிறது. திமுக தருவதை விட கூடுதலாக தர அதிமுக முன்வந்தாலும் சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக உயர்மட்ட நிர்வாகிகள் அனைவரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தான் சேர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால் நான்கு தொகுதிகளுக்கான திமுகவிடம் எப்படி கட்சியை அடகு வைப்பது என்று பிரேமலதா கேட்டு வருகிறார். அதே சமயம் திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் கிடைத்தாலும் நான்கிலுமே வெல்லும் வாய்ப்பு உள்ளதாக சுதீஷ் தெரிவித்து வருகிறார். இதனால் திமுக கூட்டணிக்கு தான் செல்ல வேண்டும் என்று தனது அக்கா பிரேமலதாவிடம் கூறி வருகிறார். அப்படி என்றால் ஐந்து தொகுதியாக்க முயற்சி செய்யலாம் என்று பிரேமலதா இறங்கி வந்துள்ளார். 

இந்த நிலையில் திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம் என்கிற ரீதியில் அரசியல் குளத்தில் குதித்துள்ள கேப்டன் மகன் விஜயபிரபாகரன் புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார். அப்பா உடல் நிலையால் ஏற்பட்டுள்ள அனுதாப ஓட்டு நம்மை கரை சேர்த்துவிடும் என்று அவர் கூறிய ஐடியாவை கேட்டு தேமுதிக நிர்வாகிகள் தெறித்து ஓடியுள்ளனர். 

ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலோடு கட்சியின் கூடாரம் காலியாகிவிட்டது. தற்போது இருக்கும் சிலரும் இந்த தேர்தலில் நின்று எம்பியாகும் விருப்பத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கேப்டன் மகன் அரசியல் என்றால் என்ன என்றே தெரியாமல் மேடைக்கு மேடை ஸ்டாலினுக்கும், எடப்பாடிக்கும் சவால் விட்டு வருவதை தேமுதிக உயர்மட்ட நிர்வாகிகள் சுத்தமாக விரும்பவில்லை. அதிலும் கூட்டணி விவகாரம் குறித்து அவர் பேசியதை கேட்டு நிர்வாகிகள் பலர் கடுப்பாகியுள்ளதாக கூறப்படுகிறது. மகன் பேச்சை கேட்டு விஜயகாந்த் எதுவும் விசித்திரமான முடிவாக எடுத்துவிடுவாரோ என்று நிர்வாகிகள் மரண பீதியில் சுற்றி வருகிறார்களாம்.