வருமான வரித்துறையினர் தமது வீட்டில் ரெய்டு செய்யவில்லை என்றும், கணக்கு வழக்கு சரியாக உள்ளதா என சர்வே மட்டுமே செய்ததாகவும், நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. 

தான் நடிக்கும் படங்களுக்கு கோடி கணக்கில் சம்பளம் பெரும் நடிகர்களின் பட்டியலில் இருக்கும் இவர், கடந்த காலங்களில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது. அதனடிப்படையில், வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய அலுவலகத்துக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த நிலையில், தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது குறித்து விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். சென்னை, வடபழனியில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை திரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி, தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லை என்றும், ஜி.எஸ்.டி வரி கட்டுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.

அப்போது, பேசிவிட்டு நான் பேசவில்லை என்பதும், அட்மின்தான் பதிவிட்டார் என்று சொல்வதுதான் இப்போது ட்ரண்ட். அதுமாதிரி என்னுடைய வீட்டில் ரெய்டு நடக்கவில்லை, என் வீடு போல் செட் போட்டு நடந்திருக்கலாம் என்று சொல்லமாட்டேன். வீடு மற்றும் அலுவலகத்திற்கு வருமான வரித்துறையினர் வந்தது உண்மைதான்.  

ஆனால், சோதனை நடைபெறவில்லை. ஆய்வு செய்யத்தான் அதிகாரிகள் வந்தனர். அதுவும், கணக்கு விவகாரத்தில் ஆடிட்டர் செய்த சிறு குழப்பத்தினால் வந்த விளைவுதான் இது. குழப்பம் நீங்கியதும் அதிகாரிகள் சென்று விட்டனர் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார். 

சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததும், எனது அட்மின் செய்த தவறு என்றும், அது என் குரலே இல்லை; எடிட் செய்துள்ளார்கள் என்றும்  தமிழக அரசியல் தலைவரின் பேச்சைக் குறிப்பிடும் வகையில், நடிகர் விஜய் சேதுபதி மறைமுகமாக அதனைக் கிண்டலடித்தார்.