நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட என திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் கோழைத்தனமான ஒன்று என்றும், உடனே அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு 800 என்ற படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விஜய்சேதுபதியை படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தி முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்து நன்றி வணக்கம் என விஜய்சேதுபதி கூறியிருந்தார். 

இது தமிழகம் முழுவதும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் நினைவு அஞ்சலியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம். இனி அதைப் பற்றி பேசுவதால் எந்த பயனும் இல்லை, விடுங்க.  என விரக்தியாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இருக்கும் சில விஷமிகளின் பதிவுகள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக ஒருவர் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் விதமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது காண்போர் அனைவருக்கும் ஆத்திரத்தையும் அதிர்ச்சியும் ஏற்பட வைத்துள்ளது. 

அதை வெளியிட்ட நபருக்கு பெரும்பாலானோர், குறிப்பாக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள  திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி. விஜய்   சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித் தனமானது மட்டுமல்ல, மிகுந்த ஆபத்தானதும் கூட, பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதைச் செய்த நபர் மீது உடனே காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.