தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் பொதுவாக தங்கள் சினிமாவில்தான் அமைச்சர், முதலமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் முறைப்பதும், நியாயம் கேட்பதும், பஞ்ச் பேசுவதும், பதறவிடுவதுமாக இருப்பார்கள். ஆனால் யதார்த்த வாழ்க்கையில் எங்கே தங்களின் படங்கள் ரிலீஸுக்கு அல்லது ஓடுவதற்கு சிக்கல் வந்துவிடுமோ! என்று அடக்கியே வாசிப்பார்கள். இந்த டிரெண்டெல்லாம் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் அரசியலில் வீரியமாக இருந்த காலத்தில்தான். ஆனால் இப்போதெல்லாம் அப்படியே தலைகீழாக நடக்கிறது. சினிமாவில் கூட அரசல் புரசலாக அரசியல் தலைவர்களை தாக்கி காட்சிகளும், வசனங்களும் வைக்கிறார்கள். ஆனால் யதார்த்த வாழ்வில் நேரடியாகவே தலைவர்களை போட்டுப் பொளக்கின்றனர்.

 

சமீபத்தில் பிகில் பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் டிஜிட்டல் பேனர் வைத்ததால் சென்னையில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியை, எடப்பாடியை உரசிப்பேசினார் விஜய். ஏற்கனவே சர்க்கார் படத்தின் விழாவிலும்  அரசியல் பேசி பற்ற வைத்தார், அந்தப் படத்தில் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க.வை வெளிப்படையாகவே போட்டுத் தாக்கியிருந்தார். அது போன தீபாவளிக்கு. இப்போ இந்த தீபாவளிக்கும் தளபதி ஒரு சரவெடியோடு ரெடியாகிட்டார். அது ‘பிகில்’ படத்திலும் அ.தி.மு.க.வுக்கு எதிரான ஆட்டங்கள் இருக்குமென தெரியுது. 
விஜய் இப்படி அ.தி.மு.க.வை உரசிக் கொண்டிருக்க, விஜய் சேதுபதியோ தி.மு.க.வை உரசியிருக்கிறார். அதாவது ‘டிஜிட்டல் பேனர் வைக்க கூடாது.’ என்று தன் கட்சியினருக்கு ஸ்டாலின் உத்தரவு போட்டார். உடனே இதற்கு நன்றி தெரிவித்து அக்கட்சியினர் பேனர் வைத்தது போல் ஒரு மீம்ஸை நெட்டிசன்கள் தட்டிவிட்டு வைரலாக்கினர்.

 

ஸ்டாலினை எரிச்சலூட்டிய மீம்ஸ் இது. இந்த மீம்ஸை விஜய் சேதுபதி தனது பர்ஷனல் நம்பரின் வாட்ஸ் அப் டி.பி.யாக விஜய்சேதுபதி வைத்திருக்கிறார். அது அடுத்த நொடியே பரபரவென பரவியது. சிலர் சட்டென்று அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, ‘ஸ்டாலினை உரசும் விஜய் சேதுபதி’ என்று பரப்பிவிட்டனர். விஷயம் வில்லங்கமாவது தெரிந்ததும் சாவகாசமாக டி.பி.யை மாற்றிவிட்டார் சேதுபதி. அதற்குள் அவர் நினைத்தது போலவே ஸ்க்ரீன் ஷாட் வாயிலாக பல ஆயிரம் பேருக்கு பரவிவிட்டது. 

சரி, விஜய் சேதுபதி இப்படி தி.மு.க.வை முறைக்க காரணம் என்னவாம்? இது பற்றி பேசும் அரசியள் பிளஸ் சினிமா விமர்சகர்கள் “ஒரு இளம் நடிகையோடு தி.மு.க.வின் வாரிசு ஒருவருக்கு சமீபத்தில் ஒரு சர்ச்சை உருவானது. அதில் நடிகை அதிகம் பாதிக்கப்பட்டாராம். அந்த நடிகை விஜய்சேதுபதியின் புதிய ஹீரோயினாம். அவருக்கு தன்னால் ஆன ஆதரவை தெரிவிக்கவும், தி.மு.க. தரப்புக்கு கண்டனம் தெரிவிக்கவுமே இந்த கிண்டல் போட்டோவை டி.பி.யாக விஜய்சேதுபதி வைத்தார்!” என்கிறார்கள்.ஆக, கோடம்பாக்கம் ஒரு கோக்குமாக்காகதான் அரசியலை எதிர்த்து அரசியல் செய்யுது போங்கள்.