கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கேரள பேருந்தை வழிமறித்த பாஜக தொண்டர்களை காவல்துறை எஸ்.ஐ மோகன், மிரட்டிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

கேரளாவில் சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழைந்து இரு பெண்கள் வழிபட்டதையடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது. பாஜகவினரும், மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் தொடர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக எல்லைப் பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் பதற்றம் நிலவி வருகிறது. 

களியக்காவிளையில் கேரள மாநில பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அப்போது அந்த பகுதியில் திரண்டு இருந்த பாஜக தொண்டர்கள், திடீரென கேரள அரசு பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரையும் தாக்க முயன்றனர். இதனை அறிந்து  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பாஜக தொண்டர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுப்பட்டனர். இதனால் கோபமடைந்த களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன், பாஜகவினரை கம்பீரமாக நின்று விரட்டியடித்தார்.

“சவுண்டுவுட்டா நீங்கெல்லாம் என்ன பெரிய ஆளா?” பேருந்து அரசு சொத்து. அது மேல வன்முறையை காட்டுறது தப்பு” என கம்பீர குரலில் அவர் கர்ஜித்ததால் பாஜகவினர் மிரண்டு அங்கிருந்து கலைந்தனர். எஸ்.ஐ மோகன் பேசிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரது இந்த செயலை அறிந்த கேரள மக்கள் தமிழக சிங்கம் எனக் கொண்டாடி வருகிறார்கள்.