’அந்த’ ஆடியோவில் சிக்கிய அமைச்சரை பற்றிய அடுத்த ஹாட் சி.டி. ரெடி: ரிலீஸுக்கு நாள் குறித்த வீடியோ வெற்றிவேல்

தமிழக அரசியல் மட்டுமில்லை தேசிய அரசியலையும் தான் அவ்வப்போது வெளியிடும் சென்சிடீவ் ஆடியோ மற்றும் வீடியோக்களால் அலற விடுபவர் வெற்றி வேல். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தமிழகத்தின் அதிரடி அமைச்சர் ஒருவரின் ரகசிய ஆடியோ பேச்சை வெளியிட்டு, பெரும் பிரளயத்தைக் கிளப்பினார். கையோடு ’எம்.பி.க்கு தம்பி பாப்பா பொறந்திருக்குது!’ என்று சொல்லி அதற்கு ஒரு டேக் லைனும் கொடுத்து தீ மூட்டினார். 
அந்த ஆடியோவுக்கு முன்பாக, மருத்துவமனையில் ஜெயலலிதா ஜூஸ் குடித்தபடி இருக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு, ‘அப்பல்லோவில் அம்மா நலமாக தேறி வந்ததை கவனியுங்கள். சின்னம்மா அம்மாவை எந்த குறையும் இல்லாமல் பார்த்ததற்கு வாழ்நாள் சாட்சி இந்த ஆதாரம்’ என்று அவர் கிளப்பிய பரபரப்பையும் நாம் மறக்க முடியாது. 
அப்பேர்ப்பட்ட வெற்றிவேல், கடந்த சில மாதங்களாக அமைதி காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், இப்போது ஒரு பேட்டியில் மீண்டும் அதே பழைய அமைச்சரைப் பற்றிய ஒரு ரகசிய சி.டி.யை வெளியிட இருப்பதாக வெடிகுண்டை பற்ற வைத்திருக்கிறார் வெற்றிவேல். 
அந்த பேட்டியில் பல விஷயங்களை இப்படி போட்டு சாத்தியிருக்கும் வெற்றிவேல்....
*    உள்ளாட்சி தேர்தலில்  அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரண்டு கட்சிகளும் பெரும் கூட்டணியை வைத்துக் கொண்டு போட்டி போட்டார்கள். ஆனால் நாங்களோ தனி கட்சியாக, பொது சின்னம் கூட இல்லாமல், கிடைத்த சின்னத்தில் நின்று பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறோம். எங்களோடு நேர்மையாக மோத ஆசைப்பட்டிருந்தால் எங்களுக்கு ஒரே சின்னத்தை கொடுக்க சம்மதித்திருக்க வேண்டும். ஆளும் கட்சியான அதன் கையில் தேர்தல் கமிஷன் இருப்பதால், அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் மீறி வென்றிருக்கிறது அ.ம.மு.க.

*    சசிகலா முன்பை விட இப்போது மிகுந்த மன உறுதியுடன் இருக்கிறார். தினகரனும் அவருடன் நல்ல தொடர்பில் இருக்கிறார். சட்டப்படி அவர் வெளியே வரும் காலம் விரைவில் வரும். அவர் வெளியே வந்தவுடன் அ.தி.மு.க.வில் இருக்கும் பலரும் அவரைத் தேடி வந்து சேருவார்கள். எதிரிகள் பரப்பி வரும் பொய்யான விஷயங்களுக்கு சரியான பதிலடியை கொடுப்பார் சின்னம்மா. 
*    ஜெயலலிதா பற்றிய புதிய வீடியோ ஏதேனும் வருமா? என்கிறார்கள். அம்மா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது முழு ஒப்புதலுடன் பல வீடியோக்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றை வெளியிட விசாரணை ஆணையம் தடை விதித்துள்ளது. 

*    தமிழகத்தின் அந்த அமைச்சர் பற்றிய ரகசிய ஆடியோ பூகம்பத்தைக் கிளப்பியது. ஆடும் காலத்தில் ரொம்ப ஓவராக அவர் ஆடி முடிச்சுட்டார். இனி அவரது ஆட்டம் அவ்வளவுதான். சரியான நேரம் வரட்டுமென்று காத்திருக்கிறேன். வந்ததும், புதிய ரகசியங்களை வெளியிடுவேன். 
.......என்று சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கிறார் வெற்றி. 
ஆக! அடுத்த பஞ்சாயத்து ரெடியாகுது. 
-    விஷ்ணுப்ரியா