நண்பர் ஜெயக்குமார் தொடர்ந்து பேசினால் அவரது ரகசியங்களை வெளியிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும், என்ன ரகசியம் என்பது அவருக்கு தெரியும் தெரியும் எனவும் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறுகட்ட குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் நிலவி வருகின்றன. 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் நாளுக்கு நாள் வலுத்து கொண்டே போகிறது. 

இதனிடையே டிடிவி தினகரன் குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இது தொடர்ந்தால் அவர் கட்சி மற்றும் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

இதையடுத்து டிடிவியை கட்சி பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலக்குவதாக அறிவித்த நிதியமைச்சர் ஜெயக்குமார்,  ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி வருகிறார் என்றும், அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும்  தெரிவித்து வருகிறார். 

மேலும் டிடிவியை போல் அவர் நியமித்த பதவியும் நிரந்தரமில்லாதது என விமர்சித்தார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல், கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் நியமித்த புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் தலைமை கழகத்திற்கு விரைவில் வருவோம் எனவும், அதை யாரும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். 

இப்போது அமைச்சர்கள் வாய்க்கு வந்தப்படி பேசுகிறார்கள். பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன் இவர்கள் எங்கே போனார்கள்? என கேள்வி எழுப்பினார். 

சசிகலா பொதுச்செயலாளராக தலைமைக் கழகத்திற்கு வந்த போதோ, இங்கிருந்து கட்சி பணிகளை கவனித்த போதோ வாய் திறக்காத அமைச்சர்கள் சேலை கட்ட வேண்டும் என குறிப்பிட்டார். 

நண்பர் ஜெயக்குமார் தொடர்ந்து பேசினால் அவரது ரகசியங்களை வெளியிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும், என்ன ரகசியம் என்பது அவருக்கு தெரியும் தெரியும் எனவும் தெரிவித்தார்.