மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம்  மேற்கொண்டு மத்திய, மாநில அரசுகளை கடும் விமர்சனம் செய்துவருகிறார்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரண்மனை வாசலில் இன்று சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோருக்கு வாக்கு கேட்டு பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடந்தது. 

இதில் பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுக ஆட்சியை அகற்றக்கூடிய தேர்தல் இது. சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்தை அதிகமாக விளம்பரப்படுத்த தேவையில்லை. வாரிசு அடிப்படையில் நிற்கிறார் என்று அவரை விமர்சனம் செய்கிறார்கள். வாரிசு அடிப்படையில் அல்ல தகுதியின் அடிப்படையில் தான் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார்” என்று தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய வண்டவாளங்களை நன்றாக அறிந்துவைத்திருப்பீர்கள். என்னைப் பொறுத்தவரை எச்.ராஜாவை எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் பார்க்கவில்லை. 

இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது. இனிமேலும் பார்க்க முடியாது. அவரைத்தான் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

எதற்காக இதனை சொல்கிறேன் என்றால் தமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடி உளறுவது, கலவரத்தை நடத்துவதற்குத் தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக் கொண்டிருப்பது தான் எச்.ராஜாவின் தொழிலாக இருக்கிறது என்று கடுமையாக சாடினார்.

பாஜகவில் இருக்கக்கூடிய அனைவரையும் இதுபோல சொல்ல மாட்டேன் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம். நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அரசியல். அரசியல், தத்துவம், கொள்கை ரீதியாக விமர்சிப்பது ஜனநாயகத்தில் இருக்கக் கூடிய உரிமை” என்று தெரிவித்தார். 

ஆனால், கொச்சைப்படுத்தி கலவரம் தூண்டுவதில், அசிங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்தான் எச்.ராஜா என விமர்சித்தார்.
மேலும், “இப்படிப்பட்ட ஒருவர் மக்களவைக்கு போனால், அது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய அவமானம்.நாடாளுமன்றத்திற்குச் சென்றும் இதுபோல செய்தால் அங்கு இருப்பவர்கள் என்ன சொல்வார்கள்? 

இவர் சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்று சொன்னால், அது சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம் என்பதை தயவு செய்து நீங்கள் மறந்துவிடக் கூடாது” என்று  கடுமையாக பேசினார்.