Asianet News TamilAsianet News Tamil

யார் இந்த வேலு நாச்சியார்..? வீர மங்கையின் வீர வரலாறு..!

ஆங்கிலேயேரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சிவகங்கை அரசியாகப் பதவியேற்றார்.
 

Velu Nachiyar realized the glory of women's power ... Praise to Prime Minister Modi ..!
Author
Tamil Nadu, First Published Jan 3, 2022, 11:35 AM IST

மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய பெருமைக்குரியவர் வேலுநாச்சியார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

சிவகங்கை ராணியாக இருந்து ஆங்கிலயேருக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்தவர் வேலுநாச்சியார். அவரது 292வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை தமிழர்கள் பலரும் வரவேற்று ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.

 

யார் இந்த வேலுநாச்சியார்..? சிவகங்கை மாவட்டம் சக்கந்தி என்கிற கிராமத்தில் 1730 பிறந்தவர். விஜயரகுநாத செல்லதுரை சேதுபதி மன்னரின் ஒரே மகள். சிறு வயதிலேயே துணிச்சலும் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரமும் கொண்டிருந்தார்.
கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது மொழிகளையும் கற்றறிந்தவர்.

சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை 16-வது வயதில் மணந்து, பட்டத்து ராணியானார். வடுகநாதர் ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், ஆங்கிலேயப் படையின் உதவியோடு நவாபின் படைகள் சிவகங்கை மீது போர் தொடுத்தன. காளையார்கோவிலில் இருந்த மன்னர் வடுகநாதரை திடீரென்று தாக்கிக் கொன்று, காளையார்கோவிலை தங்கள் வசப்படுத்தினர்.Velu Nachiyar realized the glory of women's power ... Praise to Prime Minister Modi ..!

சின்ன மருது, பெரிய மருது தளபதிகளின் துணையோடு தப்பிச் சென்று ஹைதர் அலியின் உதவியை நாடினார் ராணி வேலுநாச்சியார். இவரது வீரம், விவேகத்தை மெச்சிய ஹைதர் அலி அவருக்கு உதவினார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சி கோட்டை, அய்யம்பாளையம் என இடம் மாறி மாறி முகாமிட்டு ஆங்கிலேயரை அடித்து விரட்ட தக்க சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆங்கிலப் படையை அழித்து, நவாபை வீழ்த்தி, சிவகங்கைச் சீமையில் தங்கள் அனுமன் கொடியை மீண்டும் பறக்க விடுவது என்று சபதமேற்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, சேனாதிபதிகள் மருது சகோதரர்களை அழைத்துக்கொண்டு குறுநில மன்னர்களை ஒன்றுசேர்த்துப் போராடப் பல இடங்களுக்கும் சென்றார்.

எப்படி அவர்களைத் தாக்கி வீழ்த்த வேண்டும் என்ற உத்திகளை வகுத்தார். 1780-ல் ஹைதர் அலியின் படையைத் தலைமை ஏற்று நடத்திச் சென்றார். தன் படைகளை மூன்றாகப் பிரித்து, மும்முனைத் தாக்குதல் நடத்தி வெற்றி வாகை சூடினார். விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். வேலு நாச்சியாரும் அவரது மகளிர் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் புகுந்து, திடீர் தாக்குதல் நடத்தினர். கோட்டையைக் கைப்பற்றினர்.

சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றி கிடைத்தபோது இந்த வீரமங்கைக்கு 50 வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர் மட்டுமே. ஆங்கிலேயேரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சிவகங்கை அரசியாகப் பதவியேற்றார்.

இவரது ஆட்சியில் சிவகங்கை பல்வேறு வகையிலும் வளர்ச்சி அடைந்தது. படையெடுப்புகளால் சிதைந்த கோட்டைகளைச் சீரமைத்தார். விவசாயத்தை விரிவுபடுத்தினார். ஆறுகளை அகலப்படுத்தினார். துணைக் கால்வாய்கள் தோண்டப்பட்டன. கோயில்களைச் செப்பனிட்டார். இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் உடல்நலக் குறைவால் 66-வது வயதில் 1796 மறைந்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios