ரவுடிகளைத் தங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் மோடிக்கு, திமுகவையும், விடுதலைச் சிறுத்தைகளையும் விமர்சிக்க எந்தத் தகுதியும் கிடையாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

கடலூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “திமுக தலைவராக இருந்த கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவும் இப்போது இல்லை. இந்த நேரத்தை எப்படியாவது பயன்படுத்தி பாஜக காலூன்ற முயற்சித்து வருகிறது. அதற்கு தமிழகம் இடமளிக்கக் கூடாது. ஆனால், அதற்காகத்தான் இந்தத் தேர்தல் களமே. ஆனால், இதற்கு இடமளிக்கக்கூடிய வாய்ப்பை அதிமுகவும் பாமகவும் தருகின்றன. ரவுடிகளைத் தங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் மோடிக்கு, திமுகவையும், விடுதலைச் சிறுத்தைகளையும் விமர்சிக்க எந்தத் தகுதியும் கிடையாது.
ரவுடிகளின் கூடாரமாக பாஜக இருக்கிறது. ரவுடிகள் வெளிப்படையாக பாஜகவில் இணைகிறார்கள். அதேபோல சினிமாவில் மார்க்கெட் இல்லாத நடிகைகளின் கூடாரமாகவும் பாஜக உள்ளது. திடீரென முருகனைப் பற்றியே பாஜகவினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். முருகனுக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு உள்ளது? எங்களிடம் வேல்முருகனே இருக்கிறார். எங்களிடத்தில் வேலும் இருக்கிறது. முருகனும் இருக்கிறார். சேப்பாக்கத்தில் பிரசாரம் செய்தபோது கூறியதையே இங்கேயும் கூறுகிறேன். பாஜகவா? விசிகவா? நேருக்குநேர் விவாதிக்க நான் தயார். இது சமூக நீதி மண்; பெரியார் மண்” என்று திருமாவளவன் பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred