பாமக கூட்டத்தில், வேல்முருகனை கொலை செய்ய வேண்டுமென ஐயா உத்தரவிட்டிருக்கிறார். அதற்காக யார் எவ்வளவு பணம் தருகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.  இதற்கான வீடியோ உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்களும் என்னிடம் உள்ளது என வேல்முருகன் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பாமகவிலிருந்து பிரிந்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சியை ஆரம்பித்த வேல்முருகன், வரும்  தேர்தலில் பாமகவுக்கு எதிராக திமுககூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்திருந்தார். ஆனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தும் தனக்கு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், பாமக கூட்டத்தில், வேல்முருகனை கொலை செய்ய வேண்டுமென ஐயா உத்தரவிட்டிருக்கிறார். அதற்காக யார் எவ்வளவு பணம் தருகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அந்தக் கூட்டத்தில் மட்டும் 74 ஆயிரம் ரூபாய் பணம் வசூல் ஆகியிருக்கிறது. இதற்கான வீடியோ உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அதனை கொண்டுசென்று டிஜிபியிடம் அளித்துப் பாதுகாப்பு கோரினேன் எனக் கூறினார்.

தொடர்ந்து, தன்னுடைய பரப்புரையை தடுக்கும் வகையில் எடப்பாடி அரசுக்கு தேர்தல் ஆணையத்தின் ஒரு சில அதிகாரிகள் துணைபோயுள்ளனர் என்று விமர்சித்தார்.

தொடர்ந்துபி பேசிய அவர், எங்கள் கட்சியைச் சேர்ந்த சம்பத் என்பவரை கூலிப்படை வைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் எங்கள் கட்சிக்காரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில் எங்களுடைய பாணியில் பதிலடி தரப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.