12ஆம் வகுப்புப் புத்தகத்தில் "தமிழை விட..." என்று குறிப்பிடுவதற்கு என்ன வந்தது? அதிமுகவின் துணையின்றி எப்படி 12ஆம் வகுப்புப் புத்தகத்தில் தமிழின் தலை மீது சமத்கிருதத்தை ஏற்ற முடியும்? என அதிமுகவை தெறிக்கவிட்டுள்ளார் பண்ருட்டி வேல்முருகன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பல்வேறு மொழியின தேசிய அரசுகளின் இணையம்தான் இந்தியா. அதைக் குறிக்கும் விதமாக அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பல மொழிகள் உள்ளன. முன்பு 18 மொழிகள் இடம்பெற்றிருந்த அதில் இப்போது 22 மொழிகள் உள்ளன.

அப்படியென்றால் 4 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் பொருள், முன்பே இந்த நான்கு மொழிகளையும் சேர்க்காது பிழை செய்திருக்கிறார்கள் என்பதே. இது மட்டுமே பிழை அல்ல. இதுபோல் இல்லாத சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையில் சேர்த்திருப்பதும் பிழைதான். 

இல்லாத சமஸ்கிருதம் என்பது மிகச் சரிதான். நேற்று வரை சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் 13 ஆயிரம் பேர் என்றார்கள்; இன்றோ அவர்கள் 24 பேர் என்கிறார்கள். நாம் கேட்பது இதுதான்: சமஸ்கிருதம் தெரிந்த இவர்களில் இரண்டு பேர் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் வைத்துக் கொள்வோம்; அப்போது எந்த மொழியில் பேசுவார்கள்? நிச்சயம் அது சமஸ்கிருதமாக இருக்காது என்பதுதான் உண்மை. 

இதன் பொருள், சமஸ்கிருதம் யாருக்குமே தாய்மொழியாக இல்லை என்பதுதான். இந்த நடைமுறை உண்மையைக் கொண்டுதான் சமஸ்கிருதத்தை இல்லாத மொழி என்கிறோம். இறந்துபோனவரை அவர் இல்லை என்று சொல்வதைப் போல! ஆனாலும் இறந்துபோனவர் பேசியவற்றை, எழுதியவற்றை, செய்தவற்றை நாம் பேசுவது, எழுதுவது, செய்வது என்பது வேறு. 

12ஆம் வகுப்புப் புத்தகத்தில் "தமிழை விட..." என்று குறிப்பிடுவதற்கு என்ன வந்தது? அப்படிக் குறிப்பிடுவதே "உள்நோக்கம் - தீய எண்ணம் - குற்றம்" அல்லவா? 

இன்னும் பண்பாட்டின் சுவடு கூட அறியாத பெரும்பாலான இந்தி பேசும் அப்பாவி மக்களை "வகுப்புவாத-மதவாத" வெறியூட்டி, அந்த வாக்கு வங்கியால் ஆட்சியைப் பெற்று, பண்பாட்டில் இமயத்தின் முகடையே தொட்டிருக்கும் தமிழ் மக்களை மேலாதிக்கம் செய்கிறது சனாதனச் சாதிய ஆர்எஸ்எஸ் பாஜக. தன்மானத்தை விட்டு பாஜகவுக்கு அடிமைப்பட்டுப்போன அதிமுகவின் துணையின்றி எப்படி 12ஆம் வகுப்புப் புத்தகத்தில் தமிழின் தலை மீது சமத்கிருதத்தை ஏற்ற முடியும்? நடைமுறையை நோக்கியறிதலே வரலாற்று அறிவியல். அதன்படியே உரைக்கிறோம்: 

இல்லாத சமஸ்கிருதத்தை எட்டாவது அட்டவணையில் சேர்த்த அந்தப் பொல்லாத செயல்தான், இன்று 12ஆம் வகுப்புப் புத்தகத்தில் தமிழின் மீதே சமஸ்கிருதத்தை ஏற்றிவைத்தது! இது குறித்த அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு "தூக்கத்தில் உளறலாக" இருந்துவிடக் கூடாது. "எட்டாவது அட்டவணையிலிருந்து சமஸ்கிருதத்தை நீக்கு!" என்று போர்க்குரல் எழுப்புகிறது! " இவ்வாறு கூறியுள்ளார்.